(ஆர்.யசி)

யோஷித்த ராஜபக் ஷவின் கைது தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான மூவர் அடங்கிய குழுவே தீர்மானம் எடுத்துள்ளதுடன்  ஐக்கிய தேசியக் கட்சியின் முழுமையான ஆதரவுடனே இந்த சூழ்ச்சி நடந்தேறியுள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவை சிறையில் சந்திக்க மஹிந்த ஆதரவு அணியினர்  இன்று சென்றிருந்தனர். 

அதன் பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அந்த அணியின் இடம்பெற்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிதி மோசடி தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை அணைக்குழு என ஒன்று இலங்கையில் இல்லை. இலங்கையின் சட்டதிட்டத்துக்கு அமைய அவ்வாறான ஒரு விசாரணை ஆணைக்குழு செயற்பட முடியாது. 

ஆனால் இன்று அவ்வாறான பொறிமுறையின் கீழ் நபர்களை கைதுசெய்து சிறையில் அடைத்து வருகின்றனர். சர்வதேச சட்டதிட்டத்துக்கு அமையவும் இது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகவே கருதப்படுகின்றது. 

மேலும் யோஷித்த ராஜபக் ஷவின் கைது தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான மூவர் அடங்கிய குழுவே தீர்மானம் எடுத்துள்ளது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியின் முழுமையான ஆதரவுடனும் இந்த சூழ்ச்சி நடந்தேறியுள்ளது. 

ஆகவே இப்போது மக்கள் இந்த நல்லாட்சியின் உண்மையான முகத்தை தெரிந்துகொள்ள வேண்டும்.   மஹிந்தவையும் மக்களையும் பலபடுத்தும் வகையில் நாடுதழுவிய ரீதியில் மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.