(ஆர்.யசி)

கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் யோஷித்த மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் அரசியல் கைதிகளேயாவர்.  இவர்களை விடுதலை செய்யக்கோரி மக்களை ஒன்றிணைத்து போராடவுள்ளோம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்தது. 

அதேபோல் இவர்கள் விடுதலையாகும் நாளில் பத்து இலட்சம் தேங்காய்களை உடைத்து எமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் உள்ளோம்.

இன்றில் இருந்து எந்தவொரு அரச நிகழ்சிகளிலும் கலந்துகொள்வதில்லை எனவும் சுதந்திரதின விழாவை புறக்கணிப்பதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. 

நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவை சிறையில் சந்திக்க மஹிந்த ஆதரவு அணியினர்  இன்று சென்றிருந்தனர். அதன் பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அந்த அணியினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.  

இதில் விமல் வீரவன்ச, உதய கம்மன் பில, தினேஷ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.