தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெறுவதற்கு விரக்தியின்றி இறுதிவரையில் முயற்சிப்போம். தோல்வியடைந்தால் சர்வதேசம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தலையீடுகளைச் செய்வதற்கு போதிய காரணங்கள் இருக்கின்ற நிலையில் அரசாங்கம் எம்மை குறை கூறமுடியாது என உலகத் தமிழ்ப் பேரவையின் தலைவர் அருட்தந்தை எம்.ஜே.இம்மானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்திருந்த பின்னணியிலும் புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையிலும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சுதந்திர இலங்கையில் 70 ஆண்டுகளாக பலமுறை சிங்களவர்களால் ஏமாற்றம் அல்லது தோல்வியைக்கண்ட நாம் இம்முறை ஏன் இறுதிவரையில் முயற்சிசெய்ய வேண்டும். தோல்வியடைகின்றபோது அல்லது ஏமாற்றப்படுகின்றபோது சர்வதேசம் அல்லது ஐக்கிய நாடுகள் சபை தலையிடுவதற்கு நாம் தடையாக இருக்க முடியாது.
கடந்த தோல்விகளின் போது நாமே குற்றவாளிகளாகச் சர்வதேசத்தினாலும் ஐக்கிய நாடுகள் சபையாலும் கணிக்கப்பட்டதனால்தான் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் தலையீடு செய்யாமல் இருந்தமைக்கான காரணமாகின்றது. ஆனால் இம்முறை விரக்தியின்றி நம்பிக்கையுடன் இறுதிவரையில் போராடி முயற்சிப்போம்.
தோல்வியடைந்தால் அல்லது ஏமாற் றப்பட்டால் சர்வதேசம் மற்றும் ஐக்கிய நாடுகள் தலையிடுவதற்கு போதிய கார ணங்கள் உள்ளன. நம்மை குறை கூறவும் முடியாது என்றுள்ளது.