மலையகத்தில் பிரஜாசக்தி பணியாளர்கள் பலர் அரசியல் பழிவாங்கல் காரணமாக இடமாற்றங்கள் செய்யப்பட்டும், பணி நீக்கம் செய்யப்பட்டும் காணப்படுவதால்  கண்டனம் தெரிவித்து  ஹட்டன் நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்தனர்.

ஹட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பிராஜாசக்தி பணியாளர்களாகிய பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் புதிய அரசியல் மாற்றம் ஏற்பட்டதன் பின்பு பிரஜாசக்தி நிறுவனத்தை உள்வாங்கிய அமைச்சின் ஊடாக பலர் இடமாற்றங்கள் செய்யப்பட்டதுடன், பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 100ற்கும் அதிகமானவர்கள் இடமாற்றத்திற்கு ஆளாகியிருப்பதுடன் சுமார் 15 பேர் வரை கடந்த ஒரு வருட காலமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு பிரஜாசக்தி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு எதிராகவும் வன்முறைகள் தூண்டப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியே இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

பிரஜாசக்தி நிறுவனம் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது. கடந்த ஆட்சியின் போது இன்றைய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானினால் இயக்கபாட்டில் இருந்த பிரஜாசக்தி நிறுவனத்தின் பணியாளர்களே இவ்வாறு அரசியல் பழிவாங்களுக்கு ஆளாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த அரசாங்கத்தில் மேற்குறித்த அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற பிரஜாசக்தி பணியாளர்கள் பலருக்கு தங்களின் முகநூலில் தகவல் பகிர்வு செய்தமையை சுட்டிக்காட்டி பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் போராட்டவாதிகளால் தெரிவிக்கப்பட்டது.

இவை அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தும், ஹட்டனில் இயங்கும் தொண்டமான் தொழில்பயிற்சி நிலையத்தில் தொண்டமானின் பெயரை அகற்றி விட்டு பூல்பேங்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்டமைக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் இந்த பணியாளர்கள் சுமார் 2 மணித்தியாலயங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடதக்கது.