புதிய வரிகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை – எரிபொருள் விலை உயர்வுக்கு அமைச்சர் அனுர விளக்கம்

Published By: Digital Desk 1

05 Nov, 2026 | 04:56 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தற்போதைய அரசாங்கம் புதிதாக எந்தவொரு வரியையும் அறிமுகப்படுத்தவில்லை. கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த வரிகளே தொடர்ந்தும் அமுலில் உள்ளன. விலைச் சூத்திரத்தின் அடிப்படையிலேயே எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன என அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  நேற்று புதன்கிழமை (04) இடம்பெற்ற இறக்குமதி, ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் 2026ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதத்தில்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அது அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து மானியங்களை வழங்க வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கு 4,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மத்திய கிழக்கு போர்ச்சூழல் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாகவே இலங்கையிலும் எரிபொருள் விலைகளை அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், குறிப்பிட்ட காலப்பகுதி வரை நாட்டில் எரிபொருள் விலைகளை ஒரே மட்டத்தில் அரசாங்கம் பேணியதைக் குறிப்பிடவேண்டும்.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பின் முழுச் சுமையையும் நுகர்வோர் மீது சுமத்தாமல், அதன் ஒரு பகுதியை அரசாங்கம் மானியமாக ஏற்றுக்கொள்வதுடன், ஏனைய பகுதியை எரிபொருள் விநியோக நிறுவனங்களும் ஏற்கவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ஏற்கனவே 57 பில்லியன் ரூபா செலவில் மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில், டீசல் ஒரு லீற்றருக்கு 70 ரூபாய் மானியம் வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எரிபொருள் மிகவும் அத்தியாவசியமானது என்பதாலேயே இந்த மானியம் வழங்கப்படுகிறது.

செலவுகளை முறையாக நிர்வகிக்கும் அடிப்படையில் எரிபொருள் விலைகளைத் தீர்மானிக்கவேண்டும் என்ற கொள்கை பின்பற்றப்படுகிறது. 

குறிப்பிட்ட தரப்பினருக்கு மாத்திரம் மானியம் வழங்கிவிட்டு ஏனைய தரப்பினருக்கு வழங்கவேண்டாம் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு மாத்திரம் மானியம் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களுக்கும் சமமான முறையில் செயற்பட வேண்டிய இணக்கப்பாடு ஏற்கனவே எட்டப்பட்டுள்ளது. எனவே, ஒரு நிறுவனத்திற்கு மாத்திரம் விசேட சலுகை வழங்கி ஏனைய நிறுவனங்களைப் புறக்கணிக்க முடியாது.

சிங்கப்பூரில் கொள்வனவு செய்யப்படும் விலைக்கே இலங்கையிலும் எரிபொருளை விற்பனை செய்யவேண்டும் என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அவ்வாறு செய்வது நடைமுறைச் சாத்தியமற்றதாகும்.

எரிபொருள் விலை அதிகரிப்பின் ஆரம்ப காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில், தற்போது நாட்டின் எரிபொருள் நுகர்வு அதிகரித்துள்ளது. பெப்ரவரி மாதத்தில் மாதாந்த சராசரி நுகர்வு 6,007 கிலோலீற்றராக இருந்த நிலையில், தற்போது அது 6,188 கிலோலீற்றராக உயர்ந்துள்ளது. எனவே, ஒரு நாடு என்ற வகையில் எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தவேண்டிய அவசியம் உள்ளது. சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட எரிபொருள் விநியோக நிறுவனங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன. இதனால் தற்போது பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாட்டின் மொத்த டீசல் விநியோகத்தில் 76.8 சதவீதத்தை வழங்கி வருகிறது.

போட்டித்தன்மையை அதிகரித்து நுகர்வோருக்கு சிறந்த விலையை வழங்கும் நோக்கில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சில நிறுவனங்கள் தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றாமல் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன.

எரிசக்தி அமைச்சினால் எரிபொருளுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயிக்க முடியும். அந்த அடிப்படையில் டீசலின் விலை ஒரு லீற்றருக்கு 571 ரூபாவாக அறிவிக்கப்படவேண்டிய நிலை காணப்படுகிறது. இருப்பினும், பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையை மாத்திரமே தற்போது அறிவித்து வருகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 இறுதி காலாண்டில் மின் கட்டணத்தில்...

2026-11-11 17:41:14
news-image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச்...

2026-11-11 22:41:08
news-image

காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை...

2026-11-11 22:31:13
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி...

2026-11-11 17:27:27
news-image

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் மெட்ரோ...

2026-11-11 17:23:45
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு -...

2026-11-11 18:21:49
news-image

சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா...

2026-11-11 21:12:02
news-image

சஜித் பிரேமதாச விநியோகித்த பேருந்துகளுக்கு முறையாகச்...

2026-11-11 13:22:17
news-image

பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளை முடக்கும்...

2026-11-11 17:51:02
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தை நலன்புரி...

2026-11-11 20:54:31
news-image

விசுவமடு மகாவித்தியால மைதானத்திற்கான சுற்றுவேலியை அமைத்துக்கொடுத்த...

2026-11-11 20:50:59
news-image

மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ...

2026-11-11 18:22:24