சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து வெளியேறுவதற்கு புரூண்டி எடுத்த தீர்மானம் மற்றைய ஆபிரிக்க நாடுகளிலும் எதிரொலிக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் கீழான ஒரு நிறுவனமான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் ( International Criminal Court) நடத்தப்படுகின்ற விசாரணைகளில் தாங்களே பெரும்பாலும் இலக்கு வைக்கப்படுவதாக இந்த ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் நீண்டகாலமாக முறையிட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், மனித உரிமை மீறல்களுக்காக உலகின் பெரிய வல்லரசு நாடுகளைப் பொறுப்புக் கூற வைப்பதில் ஹேக் நகரில் உள்ள இந்த நீதிமன்றத்தினால் எதிர்நோக்கப்படுகின்ற முட்டுக் கட்டைகள் ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்காக ஜனநாயக நிறுவனங்களைத் தலைகீழாகப் புரட்டுவதில் ஆபிரிக்கப் பிராந்ததியத்தின் பல சர்வாதிகாரிகளுக்கு இருக்கின்ற உடந்தையிலிருந்து கவனத்தைத் திரும்புவதற்கில்லை.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து விலகுகின்ற முதல் உறுப்பு நாடு புரூண்டியாகும். ஜனாதிபதி பியரி என்குருன்சிசாவின் ஆட்சியில் இடம்பெற்று வந்த வன்முறைகள் தொடர்பில் கடந்த இரண்டு வருடங்களாக விசாரணைகளை நடத்தி வந்த ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவொன்று குற்றவியல் விசாரணைகளை நடத்துமாறும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கடந்த செப்டெம்பரில் விதப்புரை செய்திருந்தது. பாலியல் துஷ்பிரயோகம் சித்திரவதை ஆட்கள் காணாமல்போதல் 500க்கும் அதிகமானவர்கள் சட்டத்துக்குப் புறம்பான முறையில் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டமை என்று பெருமளவில் சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததாக உண்மை கண்டறியும் குழுக்கள் அறிவித்திருந்தன. அந்தக் குழுக்களினால் சேகரிக்கப்பட்ட சான்றுகளை ஐ.நா. ஆணைக்குழு உறுதிப்படுத்தியிருந்தது. பு ரூண்டியில் இருந்து அயல் நாடுகளுக்கு தப்பியோடிய அகதிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்துக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.
மத்திய ஆபிரிக்காவில் உள்ள இந்த சின்னஞ்சிறிய நாட்டில் ஒரு தனிமனிதனின் அதிகார வேட்கைக்கு எதிராக இடம்பெற்ற நியாயபூர்வமான மக்கள் போராட்டங்களையடுத்தே இந்த அட்டூழியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. எதிர்க்கட்சி பகிஷ்கரித்த போதிலும் கூட, 2003 சமாதான உடன்படிக்கையில் உள்ள ஏற்பாடு ஒன்றுக்கு முரணாக 2015 ஜனாதிபதிகள் தேர்தலை நடத்தி என்குருன்சிசா மூன்றாவது பதவிக் காலத்துக்கும் ஜனாதிபதியாகிக் கொண்டார். இரு பதவிக்காலங்களுக்கு மாத்திரமே அவர் பதவியில் இருக்க முடியுமெனினும் முதலாவது பதவிக்காலத்துக்கு தான் மக்களின் வாக்குகளால் அல்ல பாராளுமன்றத்தினாலேயே தெரிவுசெய்யப்பட்டதைக் காரணம் காட்டி மூன்றாவது பதவிக் காலத்துக்கு தேர்தலில் போட்டியிடும் தனது முடிவை நியாயப்படுத்தினார். பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு ஆட்சியதிகாரத்தில் இருந்த தனது முதலாவது பதவிக் காலத்தை கணக்கில் எடுக்கக் கூடாது என்பது அவரின் வாதம். தேர்தலுக்கு முன்னதாக இடம்பெற்ற சதிப்புரட்சி தோல்வியில் முடிந்ததையடுத்து என் குருன்சிசாவின் அதிகார வேட்கை மேலும் முரட்டுத்தனமானதாக மாறியது. அவரது எதேச்சாதிகார நிகழ்ச்சித் திட்டத்தின் பின்னால் இராணுவமும் புலனாய்வு சேவைகளும் அணிதிரண்டிருந்தன.
இதேவேளை, புரூண்டியில் நிலைவரங்களைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக சர்வதேச சமூகத்தினால் பிரயோகிக்கப்பட்ட நெருக்குதல்களும் பயனளிக்கவில்லை. உறுப்பு நாடொன்றில் இனப்படுகொலை இடம்பெறுமானால், அதைத் தடுப்பதற்கு இராணுவ ரீதியில் தலையீடு செய்ய முடியும் என்று ஆபிரிக்க ஒன்றியத்தின் சாசனத்தில் ஏற்பாடு இருக்கிறது. அவ்வாறிருந்தும் கூட புரூண்டிக்கு அமைதிகாக்கும் படையை அனுப்புவதற்கு அதிகாரமளிப்பதற்கான திட்டத்தை அந்த ஒன்றியம் கடந்த வருடம் கைவிட்டதையும் காணக்கூடியதாக இருந்தது, நிலைவரம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என்று ஆரம்பத்தில் காணப்பட்ட எதிர்பார்ப்பு பிறகு சிதறடிக்கபட்டுவிட்டது.
ஜனாதிபதி பதவிக் காலத்தை நீடித்துக்கொள்ளச் செய்வதென்பது புரூண்டி தலைவருக்கு மாத்திரம் பிரத்தியேகமானதல்ல. புரூண்டியின் உதாரணத்தை ஏனைய நாடுகளும் கூட பின்பற்றக் கூடும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து விலகுவதற்கு கடந்த வருடம் தீர்மானித்த தென்னாபிரிக்கா அது தொடர்பில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றைக் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு சில வாரங்கள் முன்னதாக தீர்மானத்தை ஒத்திவைத்தது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவுவதற்கு அடிப்படையாக அமைந்த றோம் சட்டத்தின் நியாயாதிக்கத்தை மதிக்காமல் விடுகின்ற போக்கு ஆபிரிக்க ஒன்றியத்தின் நாடுகளில் பரவலாகக் காணப்படுவது கவலைக்குரியதாகும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளில் பெரும்பாலானவை ஆபிரிக்க அரசாங்கங்கள் சம்பந்தமானவையாக இருப்பதால் அந்த நீதிமன்றம் தங்களது கண்டத்துக்கு எதிரான உணர்வைக் கொண்டிருக்கிறது என்று ஆபிரிக்கத் தலைவர்கள் தவறான தர்க்கத்தை முன்வைக்கிறார்கள். அத்தகைய வாதங்கள் அவர்களது மக்கள் மத்தியில் எடுபடக்கூடிய சாத்தியமில்லை.
எவ்வாறிருந்தாலும், என் குருன் சிசாவின் ஆட்சி சர்வதேச நீதிமன்றத்திடமிருந்து தப்பித்துக் கொள்ள இயலாமல் போகலாம்.ஏனென்றால், அந்த நீதிமன்றத்தில் உறுப்புரிமையைக் கொண்டிராத நாடொன்றுக்கு எதிரான முறைப்பாடுகளை அதற்கு பாரப்படுத்துவதற்கு றோம் சட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறது. நிலைவரம் தொடர்ந்தும் இடர்மிக்கதாக இருக்குமானால் ஏகமனதான செயற்பாட்டின் மூலமாக பாதுகாப்புச் சபை அதன் அதிகாரத்தைப் பிரயோகிக்கலாம்.
( வீரகேசரி இணையத்தள ஆய்வுத் தளம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM