வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி ஆணைக்குழு கோரிக்கை – காதர் மஸ்தான்

Published By: Digital Desk 1

05 Nov, 2026 | 02:13 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 36 வருடங்கள் கடந்தும் அவர்கள் இன்னும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாமல் இருப்பதுடன் அவர்களின் வாக்குரிமைகளும் மீறப்பட்டிருக்கின்றன. எனவே இந்த மக்களின் பிரச்சினைகள், தேவைகளை கண்டறிய ஜனாதிபதி விசாரணை குழுவொன்றை நியமிக்கவேண்டும் என தொழில் கட்சித் தலைவர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (5) நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் வட மாகாணத்திலிருந்து 85,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை ஆயுதமுனையில் பலவந்தமாக வெளியேற்றினர். அதனை அவர்களே 2002ஆம் ஆண்டில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் ஏற்றுக்கொண்டதோடு மீண்டும் அவர்கள் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் குடியமரலாம் என கூறியிருந்தனர்.

இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் புத்தளம், அனுராதபுரம் குருணாகல் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் அடைக்கலம் தேடினர். அன்றிலிருந்து தொடர்ந்து ஆதரவளித்து வரும் அந்த மாவட்டங்களின் மக்களையும் ஏனையோரையும் தனியார் நிறுவனங்களையும் நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.

முப்பத்தாறு ஆண்டுகள் கடந்த பின்னரும் அவர்களின் மீள்குடியேற்றம் இன்னும் முழுமையடையவில்லை. ஏனைய யுத்தம் சார்ந்த இடப்பெயர்வுகளிலிருந்து வேறுபட்ட இந்த வெளியேற்றமும் நீடித்த இடப்பெயர்வும், கௌரவமான மீள்திரும்புகை, ஒருங்கிணைவு, நல்லிணக்கம், சகவாழ்வு ஆகியவற்றை உள்ளடக்கிய, அவற்றுக்கே உரித்தான நிலையான தீர்வுகளை வேண்டி நிற்கின்றன. 

ஆயினும், இப்பெரும் தேசியப் பேரவலம் அரசினால் இன்னும் அங்கீகரிக்கப்படாமலும், தேசிய உரையாடலில் இடம்பெறாமலுமே உள்ளது. இதுவரை எந்தவொரு அரச விசாரணையும் நடத்தப்படவில்லை என்பதை சர்வதேசத்தினால் மிகவும் மதிக்கப்படுகின்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் 2026 ஒக்டோபரில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 32 முதல் 37ஆம் பக்கம் வரை இந்த இடப்பெயர்ப்பு சம்பந்தமான அநீதிகள் குறிப்பிட்டுள்ளன. (அவ்வறிக்கை மற்றும் நோர்வே அகதிகள் பேரவையின் வேண்டுகோளுக்கிணங்க கொள்கை மாற்றங்களுக்கான நிலையம் 2013இல் வெளியிட்ட அறிக்கை. அத்துடன் நோர்வே அகதிகள் பேரவை, உள்ளக இடப்பெயர்வு கண்காணிப்பு நிலையம் 2014இல் யுத்தம் முடிந்து 5 வருடங்களாகியும் இன்னமும் இடம்பெயர்ந்தோருக்கான தீர்வின்மை சம்பந்தமாக வெளியிட்ட அறிக்கை என நான்கு அறிக்கைகளையும் ஹன்சாட் செய்கின்றேன்.) 

இடம்பெயர்ப்புக்குள்ளான குடும்பங்கள் பல உபகுடும்பங்களாக பெருகி எவ்வித  அரச ஒதுக்கீட்டுக் காணியும், ஏனைய நிவாரணங்களும், பெறாமை மற்றும்  அவர்களின் விருப்பத்துக்கு மாறாக பூர்வீக பிரதேசத்திலிருந்து வாக்குரிமைகளை நீக்கியது  இச்சமூகத்துக்கு திட்டமிட்டு செய்யப்படுகின்ற அநீதியாகும். எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையில் பின்வரும் கேள்விகளுக்கு முறையான பதிலை எதிர்பார்க்கிறேன்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்து, அக்குழு மூலம் வெளியேற்றத்தையும் தனித்துவத்தையும் ஆவணப்படுத்தி 1990க்கு முன்னர் இச்சமூகம் கொண்டிருந்த பொருளாதார, சமூக, கலாசார மற்றும் கல்வி, காணிகள், உடமைகள் ஆகியவற்றையும், பின்னர் ஏற்பட்ட அனைத்து இழப்புக்களையும் பாதகமான தாக்கங்களையும் மதிப்பீடு செய்து, கடந்த அரசாங்கம் உள்நாட்டில் இடம்பெயர்ந்த எவரும் இல்லை என மீள்குடியேற்ற அமைச்சு தவறாக பிரகடனப்படுத்தியதையும்,  நீடித்த இடப்பெயர்வு தொடர்பான 2013ஆம் ஆண்டு அறிக்கையையும் மீளாய்வு செய்து பதினெட்டு மாதங்களுக்குள் இழப்பீடுகளையும் நிலையான தீர்வுகளையும் பரிந்துரைப்பீர்களா? 

ஜனாதிபதி செயலணியொன்றை மீள நிறுவி, பாதிக்கப்பட்ட மக்களின் பங்கேற்புடன், காலவரையறைக்கு உட்பட்ட தேசிய செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்தி கௌரவமானதும் நிலையானதுமான மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில், மீளத் திரும்ப விரும்புவோருக்குக் காணி உரிமைகளை மீளப்பெற்றுக் கொடுப்பதுடன் வீடமைப்பு, ஏனைய உட்கட்டமைப்புகளை பூரணப்படுத்தி கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

புத்தளம், அனுராதபுரம், குருணாகல் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் வாழ விரும்புவோரின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன், அவர்கள் குடியமர்த்தப்பட்ட அரச காணிகளுக்கான உரித்தையும் சேவைகளையும் சமமாகப் பெறுவதற்கான வாய்ப்பையும் உறுதிப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமா?

இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் ஊடாக இழப்பீடுகளை வழங்குவதுடன், அவை ஏனைய இடம்பெயர்ந்தோருக்கு வழங்கப்படுவனவற்றுக்குச் சமமானவையாகவும், ஏற்பட்ட அனைத்து இழப்புகளுக்கும் பாதகமான தாக்கங்களுக்கும் ஏற்புடையவையாகவும் அமைவதை உறுதிப்படுத்துவீர்களா?

இடம்பெயர்ப்புக்குள்ளான குடும்பங்களின் வாக்குரிமை சொந்த இடங்களில் இருந்து அவர்களின் விருப்பத்திற்கு மாறாக 2010ஆம் ஆண்டு முதல் நீக்கப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்திலும் வாக்காளர் பதிவில் இடம்பெறாதவர்களையும் சொந்த மாவட்டத்தில் வாக்களிக்க விரும்பும்  மக்களையும் அடையாளம் கண்டு, தமது சொந்த மாவட்டத்தில் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?

தமிழ் – முஸ்லிம் மக்களின் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதுடன், ஏனைய அனைத்துச் சட்டபூர்வமான மற்றும் பரிகார நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, வடக்கு முஸ்லிம்களின் கௌரவம், சமத்துவம், வாய்ப்புகள் ஆகியவற்றை மீட்டெடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?

இது வெறுமனே மீள்குடியேற்றம் சார்ந்த விடயம் மட்டுமல்ல, மாறாக காணி, தாயகம், அடையாளம், வாழ்வாதாரம், கௌரவம், எதிர்காலச் சந்ததியினர் ஆகியவை தொடர்பான நீதிக்கும் சமத்துவத்துக்குமான நீண்டகாலக் கோரிக்கையாகும். இக்கோரிக்கை மீளத் திரும்புவோரையும் தாம் வாழும் இடங்களிலேயே தொடர்ந்து வாழ்வோரையும் சமமாக மதிக்கவேண்டும் என வலியுறுத்துகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 இறுதி காலாண்டில் மின் கட்டணத்தில்...

2026-11-11 17:41:14
news-image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச்...

2026-11-11 22:41:08
news-image

காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை...

2026-11-11 22:31:13
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி...

2026-11-11 17:27:27
news-image

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் மெட்ரோ...

2026-11-11 17:23:45
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு -...

2026-11-11 18:21:49
news-image

சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா...

2026-11-11 21:12:02
news-image

சஜித் பிரேமதாச விநியோகித்த பேருந்துகளுக்கு முறையாகச்...

2026-11-11 13:22:17
news-image

பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளை முடக்கும்...

2026-11-11 17:51:02
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தை நலன்புரி...

2026-11-11 20:54:31
news-image

விசுவமடு மகாவித்தியால மைதானத்திற்கான சுற்றுவேலியை அமைத்துக்கொடுத்த...

2026-11-11 20:50:59
news-image

மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ...

2026-11-11 18:22:24