(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின்போது அரசாங்க அதிபர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும். இனவாதிகளின் நோக்கத்தை வலுப்படுத்தும் வகையில்தான் இவரும் செயற்படுகிறார். ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிடம் முறைப்பாடு அளிக்கவுள்ளோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு - மாதவனை விடயத்தில் மிக நெருக்கடியான சூழல் கருவுற்று உருவாகிக்கொண்டிருக்கிறது. மயிலத்தமடு - மாதவனை என்பது காலம் காலமாக மேய்ச்சல் தரையாக பயன்படுத்தப்பட்டு வந்த இடமாகும். பெரும்போக பயிர்ச்செய்கை காலத்தில் அரசாங்க செயலகத்தினால் மேய்ச்சல் தரைகளுக்கு மாடுகளை அனுப்பும் அனுமதி வழங்கும் செயற்பாடு வருடாவருடம் இடம்பெறுகின்றது.
தற்போது இந்த நடைமுறையில் நெருக்கடி நிலைமையை ஏற்படுத்துவதற்காக பல இனவாத நிகழ்ச்சி நிரலை தூண்டுகின்ற சக்திகள் அந்த இடத்தில் விவசாயம் செய்து அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வந்திருந்தபோது, மேய்ச்சல் தரையை பயன்படுத்த அனுமதிக்கும் உறுதிமொழி கொடுக்கப்பட்டது. அத்துடன் ஏறாவூர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் சமகாலத்தில் இருக்கும் சூழ்நிலையை குழப்பவும், பண்ணையாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவும் அத்துமீறிய குடியேற்றவாசிகள் விவசாயம் செய்ய இனவாத சக்திகள் தூண்டுகின்றன. இதனை மிகவும் முக்கியமான விடயமாக கருதி நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. இதற்கான காத்திருப்பு நீண்ட காலமாக இருந்தபோதிலும், அந்த பண்ணையாளர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
மயிலத்தமடு - மாதவனை விவகாரம் தொடர்பில் கடந்த 2ஆம் திகதி சமூக சேவைகள் அமைப்பினால் மக்கள் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அற வழியில் தமது உரிமையை பெற்றுக்கொடுக்குமாறு கோரினர். பசுக்கள் கொல்லப்படுகின்றன.
அதற்கான நீதியை வழங்குமாறும், பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்குமாறும் கோரியே இந்த போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்தின் வேண்டுகோளை பெற்று ஜனாதிபதியிடம் கையளிக்கவேண்டிய அரச அதிபர் வெளியில் வராமல் போராட்டத்தை திசைதிருப்பும் வகையில் நடந்துகொண்ட முறை மிகவும் கண்டிக்கப்படவேண்டியதாகும்.
மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் நாங்களும் கலந்துகொண்டிருந்தோம். அதன்படி இந்தக் கோரிக்கையை அரச அதிபரிடம் கையளிக்க முயன்றபோதும், மக்கள் பிரதிநிதிகளை சந்திப்பதை அவர் தவிர்த்துக்கொண்டதுடன், அவரை சந்திக்க முடியாத வகையிலான நடவடிக்கையையும் பொலிஸார் மூலம் ஏற்படுத்தியிருந்தார்.
இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளை சந்திக்காமல் அந்த மாவட்டத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்த முனைவது தொடர்பில் விசாரிக்கப்படவேண்டும். அரச அதிபருக்கு இந்த பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற பற்று, மாவட்டம் மீதான சமூக பார்வை, மாவட்டத்தின் அடிப்படை உரிமைகள் மற்றும் நில அமைப்பு தொடர்பில் அறிவு இருந்திருந்தால் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கமாட்டார்.
இந்த விடயத்தை இனவாத சக்திகள் தூண்டும் பிரச்சினையை அவர் இன்னும் வலுப்படுத்துகிறார் என்றே கருதுகிறோம். சுமூகமான முறையில் நியாயமான முறையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது அமைச்சர்களுக்கோ, உயர் அதிகாரிகளுக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ கொண்டுசெல்லும் பாரிய பொறுப்பில் இருக்கும் அரச அதிபர் அந்த மாவட்டத்தில் மக்கள் படும் அவலநிலை தொடர்பில் எவ்வித அக்கறையும் இன்றி தான்தோன்றித்தனமாக, ஏதேச்சதிகாரமான முறையில் நடந்துகொள்வதானது கண்டிக்கத்தக்கது என்பதுடன், விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டியதாகும். இது தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் முறையிடவுள்ளோம்.
மக்களின் பிரதிநிதிகள் மக்களின் பிரச்சினைகளை கொண்டுசெல்கின்றபோது மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் பெறும் அரச அதிகாரிகள் இவ்வாறு நடந்துகொள்வது பிரதேசத்தில் மக்களை புண்படுத்துவதாகவே அமையும். இவர்களுக்கு மக்களின் துன்பங்கள் மற்றும் அவர்களின் தேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி தீர்வினை காணாமல் தங்களின் பதவிகளை காப்பாற்ற முயற்சிப்பதாகவே தெரிகின்றது.
இந்த விடயத்தில் அரச அதிபர் விசாரிக்கப்படவேண்டும். இதேவேளை மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி அதற்கு துரிதமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM