தமிழர்களுக்கு எதிரான இனவாதப் போக்கை அரசாங்கமும் தொடர்கிறது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு

Published By: Digital Desk 1

04 Nov, 2026 | 07:01 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் கிராமங்கள் சிங்கள குடியேற்றங்களாக மாற்றப்பட்டு அவை இன்று தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. மஹிந்த, ரணில் ஆட்சியின் இனவாத போக்கினையே இந்த அரசாங்கமும் கடைப்பிடிக்கிறது. தமிழருக்கு எதிராக உருவாக்கப்பட்ட பயங்கரவாத  எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராக இன்று தெற்கில் சிங்களவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள 03 சட்டமூலங்களையும் அரசாங்கம் உடன் வாபஸ் பெற வேண்டும். இல்லையேல் கடந்த அரசாங்கங்களுக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (4) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேசத்தில் இருந்து மொரவெவ பிரதேச செயலகப் பகுதிக்கு 1200 கால்நடைகள் கொண்டு செல்லப்பட்டன. மாகாண சபைக்குப் பொறுப்பான அரச நிறுவனத்தின் அனுமதியுடன், 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையிலேயே இக்கால்நடைகள் பெரும்போக விவசாயத்தை கருத்திற்கொண்டு அப்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டன. ஆனால், அன்றைய தினமே அப்பகுதியில் குடியேற்றப்பட்டுள்ள நபர்களால் அந்த 1200 கால்நடைகளும் தாக்கப்பட்டும், காயப்படுத்தப்பட்டும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு சுமார் 14 கிலோமீட்டர் தூரம் வரை துரத்தியடிக்கப்பட்டுள்ளன.

மொறவெவ பகுதி என்பது முன்னர் தமிழ் கிராமமாக இருந்து, பின்னர் சிங்களக் குடியேற்றமாக மாறிய பகுதி. தமிழர் பகுதியில் திட்டமிட்ட வகையில் சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு அவை இன்று தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவே செயற்படுத்தப்படுகின்றன. இது முற்றிலும் இனவாத செயற்பாடு.

சட்டபூர்வமாகப் பெறப்பட்ட அனுமதியின் அடிப்படையில் தம்பலகாமம் பகுதியில் இருந்து மொரவெவ பகுதிக்குக் கொண்டுசெல்லப்பட்ட கால்நடைகள் சிங்களக் குடியேற்றவாசிகளால் துன்புறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட அரச தரப்பினர் எவ்வாறான தீர்மானம் எடுக்கப் போகிறார்கள் அல்லது இவ்வாறான அநீதிகளுக்குப் பணிந்து செயல்படப் போகிறார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான அருண் ஹேமசந்திர இந்த பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வினை பெற்றுக்கொடுக்க போகிறார்? ஒன்று அவர் நடிக்கவேண்டும் அல்லது அரசாங்கத்தின் மறைமுக இனவாத செயற்பாடுகளுக்கு அடிபணிந்திருக்க வேண்டும். பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான வெறுப்புணர்வைத் தூண்டும் சம்பவங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மயிலத்தமடு மற்றும் மாதவனை பிரச்சினைக்கு இதுவரை எந்த அரசாங்கமும் தீர்வு வழங்காத நிலையில், அப்பிரச்சினை தொடர்ச்சியாக இனவாதமாக மாற்றப்பட்டு வருகிறது. கடந்த அரசாங்கத்தின் இனவாதிகளால் தான் மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை உருவாக்கப்பட்டது என்று இந்த அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் அந்த இனவாத செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தின் பிரகாரம் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. சட்டத்தின் பிரகாரம் பண்ணையாளர்கள் செயற்படும்போது அதுவும் இனவாத செயற்பாடுகளால் தடுக்கப்படுகிறது.

தமிழ் கிராமங்கள் சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்பட்டு, அங்கிருந்து பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமித்துள்ள நபர்கள், அங்கு வரும் கால்நடைகள் மீது மிக மிலேச்சத்தனமாகத் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். திருகோணமலை மாவட்டத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்ட 1200 கால்நடைகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளார்கள். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை விமர்சிப்பதால் அவர் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டுள்ளார். புதிய சட்டங்கள் இயற்றப்படவுள்ளன. 3 வருட காலத்துக்கு சிறையில் இருக்க நேரிடும் என்று பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் .

அதேபோல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த ஒரு புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு, அவர் கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது முற்றிலும் தவறான நிலைப்பாடு. இவ்வாறான ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகள் மஹிந்த மற்றும் ரணில் காலத்தில்தான் இடம்பெற்றன. தற்போதும் அவ்வாறே இடம்பெறுகின்றன.

ஆட்சிக்கு வந்தவுடன் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் தற்போது இருப்பதை விடவும் பாரதூரமான சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தையும், வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தையும் இரத்துச் செய்யுமாறு தெற்கில் சிங்கள மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தான் உண்மையில் மாற்றம். ஜனநாயகத்துக்கும் மனித உரிமைக்கும் எதிராக செயற்பட்டால் கடந்த அரசாங்கங்களுக்கு ஏற்பட்ட கதியே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 இறுதி காலாண்டில் மின் கட்டணத்தில்...

2026-11-11 17:41:14
news-image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச்...

2026-11-11 22:41:08
news-image

காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை...

2026-11-11 22:31:13
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி...

2026-11-11 17:27:27
news-image

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் மெட்ரோ...

2026-11-11 17:23:45
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு -...

2026-11-11 18:21:49
news-image

சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா...

2026-11-11 21:12:02
news-image

சஜித் பிரேமதாச விநியோகித்த பேருந்துகளுக்கு முறையாகச்...

2026-11-11 13:22:17
news-image

பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளை முடக்கும்...

2026-11-11 17:51:02
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தை நலன்புரி...

2026-11-11 20:54:31
news-image

விசுவமடு மகாவித்தியால மைதானத்திற்கான சுற்றுவேலியை அமைத்துக்கொடுத்த...

2026-11-11 20:50:59
news-image

மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ...

2026-11-11 18:22:24