உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மகளிருக்கான சர்வதேச சாகசப் போட்டியான Raid Amazones 2026 இல் பங்கேற்பதற்காக வெளிநாட்டு வீராங்கனைகள் உள்ளிட்ட சர்வதேசக் குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
நவம்பர் 2 முதல் 10 ஆம் திகதி வரை களுத்துறையை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள இந்நிகழ்வின் முதலாவது குழுவில் 146 வீராங்கனைகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நவம்பர் 2 ஆம் திகதி பாரிஸிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL564 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இம்முறை நிகழ்வில் 250 இற்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட மொத்தமாக சுமார் 300 பேர் பங்கேற்கவுள்ளனர். இவர்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்த வருகையின் மற்றுமொரு சிறப்பம்சமாக, பாரிஸிலிருந்து பயணித்த விமானம் முழுமையாக பெண் விமானிகள் மற்றும் பெண் விமானப் பணியாளர்களைக் கொண்ட குழுவினரால் இயக்கப்பட்டது. இது பெண்களின் வலிமை, சாதனை மற்றும் சாகச உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
பிரான்ஸைச் சேர்ந்த சாகச நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான அலெக்சாண்டர் டெபான்னேவினால் 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Raid Amazones, பெண்களுக்காக மாத்திரம் நடத்தப்படும் சர்வதேச சாகசப் போட்டியாகும்.
உடல் வலிமை, குழு ஒத்துழைப்பு, வெளிப்புற சாகசச் செயற்பாடுகள் மற்றும் கலாசார அனுபவங்கள் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் இந்நிகழ்வு, பெண்கள் தமது ஆற்றலின் எல்லைகளைத் தாண்டி புதிய அனுபவங்களைப் பெறுவதற்கும், சர்வதேச நட்புறவுகளை வளர்த்துக்கொள்வதற்கும் வாய்ப்பளிக்கின்றது.
எட்டாவது தடவையாக இலங்கையில் நடைபெறும் இந்நிகழ்வு, களுத்துறையின் கடற்கரைப் பகுதிகள், ஆறுகள், ஈரநிலங்கள், வெப்பமண்டலத் தாவரச் சூழல்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளை உள்ளடக்கியதாக அமையவுள்ளது.
இதன் மூலம் பங்கேற்பாளர்கள் இலங்கையின் பாரம்பரியங்கள், உணவுக் கலாசாரம் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றையும் அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறவுள்ளனர்.
பெயரிடல் உரிமைப் பங்காளராக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
Raid Amazones 2026 நிகழ்வின் பெயரிடல் உரிமைப் பங்காளராக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செயற்படுகின்றது.
சர்வதேச வீராங்கனைகளை இலங்கையுடன் இணைக்கும் இந்நிகழ்வின் ஊடாக, நாட்டின் இயற்கை அழகு, செழுமையான கலாசாரம் மற்றும் புகழ்பெற்ற விருந்தோம்பல் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டுவதில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெருமிதம் கொள்கின்றது.
உத்தியோகபூர்வ தரைமட்ட சேவைப் பங்காளராக Connaissance de Ceylan
இலங்கையின் முன்னணி சுற்றுலா முகாமைத்துவ நிறுவனங்களில் ஒன்றான Connaissance de Ceylan, இந்நிகழ்வின் உத்தியோகபூர்வ தரைமட்ட சேவைப் பங்காளராகச் செயற்படுகின்றது.
சர்வதேச ஏற்பாட்டுக் குழுவினருடனும் தொடர்புடைய தரப்பினருடனும் இணைந்து, உள்ளூர் போக்குவரத்து, பயண ஏற்பாடுகள் மற்றும் ஏனைய தளவாடச் செயற்பாடுகளை இந்நிறுவனம் ஒருங்கிணைத்து வருகின்றது.
“இவ்வளவு பெரிய சர்வதேசக் குழுவினரை வரவேற்பது இலங்கையின் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கான சிறந்த வாய்ப்பாகும். உத்தியோகபூர்வ தரைமட்ட சேவைப் பங்காளராக, பங்கேற்பாளர்கள் நாட்டை வந்தடையும் தருணத்திலிருந்து அவர்களுக்கு சுமுகமானதும் மறக்க முடியாததுமான அனுபவத்தை வழங்குவதற்காக Raid Amazones குழுவினருடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றோம். எமது விருந்தோம்பலை அனுபவிப்பதுடன், இலங்கையின் பல்வகைப்பட்ட இயற்கைச் சூழல்களைக் கண்டறிந்து, நாட்டைப் பற்றிய உண்மையான மதிப்பீட்டுடன் ஒவ்வொருவரும் தமது நாடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்” என Connaissance de Ceylan நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக அபிவிருத்திப் பணிப்பாளர் மாக்சிம் விக்ரமசிங்க தெரிவித்தார்.
Raid Amazones, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் Connaissance de Ceylan ஆகியவற்றின் கூட்டாண்மையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகமும் ஆதரவு வழங்குகின்றது.
இந்நிகழ்வில் பங்கேற்கும் வீராங்கனைகள் மற்றும் சர்வதேசக் குழுவினருக்கான உத்தியோகபூர்வ தங்குமிடப் பங்காளராக Turyaa Kalutara செயற்படுகின்றது.
சர்வதேச வீராங்கனைகளின் வருகையுடன் களுத்துறை ஒன்பது நாட்கள் சாகசம், கலாசாரப் பரிமாற்றம் மற்றும் புதிய அனுபவங்களுக்கான சர்வதேச சந்திப்புத் தளமாக மாறவுள்ளது.
இந்நிகழ்வு, சாகசச் சுற்றுலா, இயற்கை வளங்கள், கலாசாரம் மற்றும் உள்ளூர் மக்களின் உண்மையான விருந்தோம்பல் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் சுற்றுலாத் தலமாக இலங்கையை சர்வதேச ரீதியில் மேலும் பிரபலப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM