வீதி இலக்கம் 400இன் ஊடாக களுத்துறையிலிருந்து அளுத்கம வரையிலான பஸ்களில் பயணிக்கும் பெண்கள் பாரியளவிலான பாலியல் சேஷ்டைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக பெண் பயணிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதியின் ஊடாக பயணிக்கும் போது பெண்கள் பாலியல் சேஷ்டைகளினால் அசௌகரியத்துக்குள்ளாவதாகவும் மதிய வேளைகளை விட மாலை 5 மணியின் பின்னரான நேரங்களில் பாலியல் தொல்லை தரும் நபர்கள் கூட்டமாக பயணிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சேவை புரியும் பெண்கள் மாலை 5 மணிக்கு பிறகு வீட்டிற்கு செல்வதற்காக கிடைக்கும் பஸ்களில் ஏறி செல்ல வேண்டிய நிலைப்பாட்டில் உள்ளதாகவும் அவ்வாறு செல்லும் போது சொற்ப நேர சந்தோஷங்களுக்காக பெண்களை கவர்ச்சிப் பொருளாக பாவித்து மனிதாபிமானம் அற்ற வகையில் ஆண்கள் நடந்து கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த வீதியில் பயணிக்கும் பாலியல் சேஷ்டைகளில் ஈடுபடும் ஆண்கள் பயணிகள் இல்லாத பஸ்களில் ஏறாமல் மாலை வேளைகளில் கூட்டம் அதிகமாக உள்ள பஸ்களில் ஏறி பெண்களுக்கு மத்தியில் நின்று கொண்டு தங்களது லீலைகளை புரிவதாக பாடசாலை மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக களுத்துறை – அளுத்கம பிரிவிலுள்ள மகளிர் அமைப்புக்கள் ஒன்றினைந்து பஸ்களில் மற்றும் பொது இடங்களில் பெண்களிடம் பாலியல் சேஷ்டை செய்பவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு செய்துள்ளனர்.