சீனாவினதும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினதும் தலைவராக 5 வருடங்களுக்கு முன்னர் சி ஜின்பிங் தெரிவு செய்யப்பட்ட போது அந்நாட்டின் பொருளாதார எழுச்சியின் சிற்பி என்று வர்ணிக்கப்படுகின்ற காலஞ்சென்ற தலைவர் டெங்சியாவோ பிங்கைப் போன்ற பலம்பொருந்திய தலைவராக அவர் வருவார் என்று பலரும் எதிர்வு கூறினர்.
அவர்களது எதிர்வு கூறல் தவறாகப் போய்விட்டது என்று தான் கூறவேண்டும். கடந்த வாரம் முடிவடைந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது மகாநாட்டில் சி ஜின்பிங்கின் பெயரும் அவரது சிந்தனைகளும் கட்சியின் அரசியலமைப்புக்குள் சேர்த்து எழுதப்பட்டதையடுத்து அவர் மா ஓ சேதுங்கிற்கு பிறகு மிகவும் பலம்பொருந்திய ஒரு தலைவராக மாறியிருக்கிறார் என்றே இப்போது தோன்றுகிறது. மா ஓ போன்று அதிகாரங்களைத் தன்வசம் எடுத்திருப்பதன் விளைவாக சி ஜின்பிங் வழமையான இரு பதவிக் காலங்களுக்கு அப்பாலும் அதிகாரத்தில் தொடரக்கூடிய சாத்தியம் இருப்பதாக நம்பப்படுகிறது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அரசாங்கத்திலும் ஆற்றலும் போரார்வமும் கொண்ட தலைவர்களுக்கு தட்டுப்பாடு கிடையாது. அதிகார மாற்றம் ஒழுங்கமைவான முறையில் இடம்பெறுவதை உறுதி செய்யக்கூடிய ஏற்பாடுகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. சி ஜின் பிங்கிற்கு முன்னர் கட்சியின் பொதுச் செயலாளர்களாகவும் நாட்டு ஜனாதிபதிகளாகவும் இருந்த சியாங்செமினும் _ஹூ ஜின்ராவோவும் இரு பதவிக் காலங்களுக்குப் பிறகு அதாவது 10 வருடங்களுக்குப் பிறகு பதவியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் இரு பதவிக் காலங்களுக்கு ஜனாதிபதியாக பதவியில் இருப்பதை அனுமதிக்கும் நடைமுறை வழக்கில் இருந்து வருகிறது.
ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மகாநாடுகளில் ஒன்றில் கட்சியின் பொதுச் செயலாளராகத் தெரிவாகின்றவர் அடுத்த ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் மகாநாட்டில் தனது இரு பதவிக் காலங்களின் முடிவில் அதிகாரத்தைப் பொறுப்பேற்பதற்கு தகுதியான ஒருவரை அடையாளம் கண்டு பதவிக்காக அவரைத் தயார் செய்வது நடைமுறையாக இருந்துவந்துள்ளது. ஆனால், இத் தடவை 19 ஆவது மகாநாட்டில் அவ்வாறான 'எதிர்காலத் தலைவர்' ஒருவரைக் கட்சி தெரிவு செய்ததாகத் தெரியவில்லை. சீனாவின் கொள்ளைகளை வகுக்கும் அதியுயர் அமைப்பான கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவின் நிலையியல் குழுவின் (7 பேரை உறுப்பினர்களாகக் கொண்டது) புதிய ஐந்து முகங்களும் 60க்கும் 70க்கும் இடைப்பட்ட வயதில் உள்ளவர்களே.
இது 2022 ஆம் ஆண்டில் தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடையும் போது பதவியில் இருந்து இறங்குவதற்கு ஜனாதிபதி சி ஜின்பிங் உத்தேசம் கொண்டிருக்கவில்லை என்ற ஊகங்களுக்கு வலுச் சேர்த்திருக்கிறது. அவர் அரசாங்கத்தில் இருந்து இறங்கினாலும் கூட (கட்சிக்குள் அவர் அடைந்திருக்கும் உயர்த்தியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது) டெங் சியாவோபிங் செய்ததைப் போன்று கொள்கை விவகாரங்களில் செல்வாக்கைச் செலுத்தும் அந்தஸ்தை தொடர்ந்தும் தன்வசம் வைத்திருக்க கூடும்.
சி ஜின் பிங்கின் உலகப்பார்வையைப் பொறுத்தவரை சீனா இரு யுகங்களைக் கடந்து வந்திருக்கிறது. ஒன்று மா ஓ சேதுங்கினால் முன்னெடுக்கப்பட்ட புரட்சிகர யுகம்.மற்றது டெங் சியாவோ பிங்கினால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்த யுகம். கம்யூனிஸ்ட் கட்சியின் சாசனத்தில் இப்போது சேர்த்து எழுதப்பட்டிருக்கும் புதிய யுகமொன்றுக்கான சீனப் பண்புகளுடனான சோசலிசம் தொடர்பான சி ஜின்பிங் சிந்தனை புதிய யுகமொன்றைக் குறித்து நிற்கிறது. இந்தப் புதிய யுகம் சீனாவைப் பொருளாதார ரீதியில் மிகவும் பலம் பொருந்தியதாகவும் பூகோள அரசியல் ரீதியில் மிகவும் செல்வாக்கு மிக்கதாகவும் மாற்றுவதைப் பற்றியதாகும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது மகாநாட்டின் தொடக்க நாளில் ஜனாதிபதி சி ஜின் பிங் தனது மூன்றரை மணிநேர உரையில் இராணுவ ரீதியில் சீனாவை வலுப்படுத்துவதற்கும் சீனாவைப் பற்றிய தவறான கருத்துக் கோணங்கள் பலவற்றையும் எதிர்ப்பதற்குமே மிகுந்த முக்கியத்துவத்தைக் கொடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. சமாதான எழுச்சியுகம் முடிவடைகிறது என்பதே அவர் தனது உரையின் மூலமாக விடுத்திருக்கக்கூடிய செய்தியாகும். சி ஜின்பிங் நிருவாகத்தினால் முன்னெடுக்கப்பட்ட பெருமளவுக்கு எதிர்ப்புச் செய்கின்ற அல்லது சண்டைக்குணமுள்ள வெளியுறவுக் கொள்கை மேலும் கூடுதல் தன்முனைப்புடன் அல்லது பிடிவாதத்துடன் தொடரும் என்கின்ற அதே வேளை உள்நாட்டில் அவர் தனது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்துவார்.
ஆனால், இது எளிதான ஒரு செயன்முறையாக இருக்கப் போவதில்லை. கூடுதலான அளவுக்கு தன்முனைப்பான இராணுவவாத அணுகுமுறையை அயல்நாடுகள் தொடர்பில் சீனா கடைப்பிடிக்குமாக இருந்தால் இந்தியா, ஜப்பான் போன்ற அயல்நாடுகளிடமிருந்தும் அதேபோன்ற அணுகுமுறையையே அது தூண்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை. வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வடகொரியா ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது அதேபோன்று சி ஜின் பிங்கிற்கும் இது பெரிய பிரச்சினையே .
ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட சீனப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரச் சுழல் காற்றில் இருந்து இன்னமும் விடுபடவில்லை. உள்நாட்டில் முக்கியமான பொருளாதாரத் தீர்மானங்களை எடுக்கும் போது உலகளாவிய சந்தை அக்கறைகளை சி ஜின் பிங் கருத்திலெடுக்க வேண்டியிருக்கும். தவிரவும் குறைந்தது கடந்த 30 வருடகாலத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார மாற்றம் ஒழுங்கமுறையிலானதாக இருந்துவந்திருக்கின்ற போதிலும், அது பிரச்சினைகளில் இருந்து விடுபட்டதாக இல்லை. கடுமையான எதிர்வினைகள் கிளம்பாதிருப்பதை உறுதி செய்வதற்காக தனது சொந்த அதிகாரத்தை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது தொடர்பில் சி ஜின்பிங் மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தனது பேரார்வங்களுக்கும் சீனா இன்று முகங்கொடுக்கின்ற யதார்த்தங்களுக்கும் இடையே ஒரு சமநிலையை கண்டுபிடிக்க வேண்டியதே அவர் முன்னாலுள்ள சவாலாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM