"நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எமது ஆளுமை பயணம் தொடரும்" என முற்போக்கு கூட்டணி தலைவரும் தேசிய சக வாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இன்றைய அமைச்சரவை முடிவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இவ் விடயம் குறித்து மேலும் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

"நுவரெலிய மாவட்ட புதிய பிரதேச சபை தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சற்றுமுன் அமைச்சரவை அங்கீகரித்தது. நண்பர் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

1987ஆம் ஆண்டு  முதல் கடந்த முப்பது வருடங்களாக கவனிப்பாரற்று இருந்த கனவுக்கோரிக்கை இதுவாகும். இதை கையில் எடுத்து நாம் நனவாக்கி காட்டியுள்ளோம். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தொலைநோக்கு தேசிய பயணத்தில் ஒரு மைல் கல்லாக இது அமைகிறது. இனி புதிய வரலாறு எழுதப்படட்டும். " என்றார்.

புதிய பிரதேச சபைகளை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் முதற்கட்டமாக இந்த சாதனை அமைந்துள்ளது. இதை நாம் எம் காத்திரமான நடவடிக்கை மூலம் செய்து முடித்துள்ளோம்.

இதைப்பெற சில வேளைகளில் சண்டை போடவும், சில வேளைகளில் சிரிக்கவும் வேண்டியிருந்தது. அவற்றை நாம் செய்தோம். நானும் எங்கள் கூட்டணி பிரதி தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரமும் அமைச்சரவையில் இந்த விடயத்தை முன்னெடுத்தோம்.

எங்கள் கூட்டணியின் இன்னொரு பிரதி தலைவர் அமைச்சர் ராதாகிருஷ்ணன் இதற்கு ஒத்துழைப்பை வழங்கினார். ஜனநாயக அடிப்படையில் போராடி கிடைக்கும் தீர்வை நிராகரிக்காமல் வாங்கி ஏற்றுக்கொண்டு, அதன்மூலம் எம்மை ஸ்திரப்படுத்திக்கொண்டு,அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் கொள்கை அடிப்படையில் இது சாத்தியமாகியது.  

எமது இந்த ஆளுமை பயணம் தொடரும், கடந்த காலங்களில் கவனிப்பாரற்று  மறுக்கப்பட்டிருந்த இருந்த அனைத்து உரிமைகளையும் படிப்படியாக திட்டமிட்டு  எதிர்காலத்தில் நாம் பெறுவோம்." என்றார்