(எம்.எப்.எம்.பஸீர்)

தனது கடமைகளை முடித்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து சிவில் உடையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அங்கும்பர பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் தர அதிகாரி ஒருவர் மீது சரமரியான வாள்வெட்டுத் தககுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதுன்கடை பகுதியில் வைத்து இந்த தககுதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் தாக்குதலில் படுகாயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் கண்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந் நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை அலவத்துகொடை பொலிஸார் கைது செய்ததுடன் பிரதான சந்தேக நபரை தேடி வருகின்றனர். பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரைக் கைதுசெய்ய கண்டி உதவி பொலிஸ் அத்தியட்சர்களில் ஒருவரான கமல் ரணவீரவின் கீழ் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு 7.20 மணியளவில் தனது கடமைகளை நிறைவு செய்த பின்னர் மோட்டார் சைக்கிளில் குறித்த உப பொலிஸ் பரிசோதகர் தான் கடமையாற்றும் அங்கும்புர பொலிஸ் நிலையத்தில் இருந்து அலவத்துகொடையில் உள்ள தனது வீட்டுக்கு பயணித்துள்ளார்.

இதன்போதே அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்புக் எல - முதுன்கடை பகுதியில் சன நடமாட்டமற்ற காட்டுப் பகுதியில் மறைந்திருந்த சிலர் மோட்டார் சைக்கிளை வழி மறித்து உப பொலிஸ் பரிசோதகரை வாள்கள், தடிகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் சரமரியாக தககியுள்ளனர்.