கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்‌ஷவின் பிணை கோரிக்கை மீதான உத்தரவு நவம்பர் 3ஆம் திகதி

28 Oct, 2026 | 05:27 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ முன்வைத்த பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவை எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி அறிவிப்பதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) புதன்கிழமை திகதியை அறிவித்துள்ளது.

தனது பெற்றோரின் நோய்நிலையைக் கருத்தில்கொண்டு தன்னைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி, நாமல் ராஜபக்‌ஷவின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரம் இன்று மீண்டும் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான உதவிச் சட்டப் பணிப்பாளர் தனுஜா பண்டார, சந்தேகநபருக்குப் பிணை வழங்கப்படுவதால் விசாரணை நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் செயற்படுபவர்கள் நாளை ஒடுக்கப்பட்டவர்களாக மாறக்கூடும் எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் யாரைக் குறிப்பிடுகிறார்? இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவையா, அதன் விசாரணை அதிகாரிகளையா அல்லது சாட்சியாளர்களையா என்ற கேள்வி எழுகிறது.

இந்த விசாரணையுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து வாக்குமூலம் வழங்க விரும்பாதிருந்த இரண்டு சாட்சியாளர்கள் தற்போது வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர். முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் வாக்குமூலங்களை வழங்கியிருந்தபோதிலும், அப்போது உண்மையான தகவல்களைத் தெரிவிக்கவில்லை என அவர்கள் கூறியுள்ளனர். தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தினாலேயே உண்மைகளைத் தெரிவிக்கத் தயங்கியுள்ளனர்.

எனினும், சந்தேகநபர்களான நாமல் ராஜபக்‌ஷவும் ஜானகி சிறிவர்தனவும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், அவர்கள் மீண்டும் வாக்குமூலங்களை வழங்கி இதுவரை வெளிப்படுத்தாத உண்மைகளைத் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் விளக்கமறியலில் இருப்பதால் தாம் அச்சமின்றி வாக்குமூலம் வழங்க முடிந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த வாக்குமூலங்கள் அடங்கிய ஆவணமொன்றையும் நீதிமன்றத்தின் பரிசீலனைக்காகச் சமர்ப்பித்துள்ளேன். சாட்சியாளர்கள் அச்சமின்றி உண்மைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் இருக்க வேண்டும். அவர்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் விசாரணை நடவடிக்கைகள் பாதிக்கப்படும்.

சந்தேகநபரின் பெற்றோருக்கு நோய்நிலை காணப்படுவது பிணை வழங்குவதற்கான விசேட காரணமாகக் கருதப்பட முடியாது. அவர்களைப் பராமரிப்பதற்கு பலர் இருக்கின்றனர். சந்தேகநபருக்கும் நோய்நிலை எதுவும் இல்லை. எனவே, அவர் முன்வைத்துள்ள காரணங்களை விசேட காரணங்களாகக் கருத முடியாது. இதனால் பிணை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம் என்றார்.

இதனையடுத்து, நாமல் ராஜபக்‌ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மன்றில் வாதங்களை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று  நான் கூறியது, இன்று ஒடுக்குமுறையாளர்களாகச் செயற்படுபவர்கள் நாளை ஒடுக்கப்பட்டவர்களாக மாறக்கூடும் என்பதையே. இதனை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உதவிச் சட்டப் பணிப்பாளர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி நாடு முழுவதும் சென்று நீதிமன்றத் தீர்ப்புகள் அறிவிக்கப்படும் திகதிகள் குறித்துப் பேசுகிறார். 50 பேர் கொண்ட பட்டியல் இருப்பதாகவும் கூறுகிறார். தீர்ப்பு அறிவிக்கப்படும் நாளில் பட்டாசு கொளுத்தவும் கைதட்டவும் கூறப்படுகிறது. எனவே, உங்களுக்குப் பொருந்தினால் அந்தத் தொப்பியை அணிந்துகொள்ளுங்கள்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் நீதித்துறையும் சுயாதீனமான நிறுவனங்களாகும். நாம் அனைவரும் ஊழலுக்கு எதிரானவர்கள். அதனால்தான் இலஞ்சச் சட்டம் காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு, இறுதியில் ஆணைக்குழுவாக அது வளர்ச்சியடைந்துள்ளது.

அரசியலமைப்பின் 13(5)ஆம் உறுப்புரையில், நீதிமன்றமொன்றினால் ஒருவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படும் வரை அவர் நிரபராதியாகக் கருதப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிரபராதித்துவ அனுமானம் இந்தச் சந்தேகநபருக்கும் உரித்தானது. குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதென்பதற்காக மாத்திரம் அந்த உரிமையை அவரிடமிருந்து பறிக்க முடியாது.

அரசியல் கருத்துகளின் அடிப்படையில் அவருக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவும் கூடாது; அதேபோன்று அவருக்கு எதிராகப் பாகுபாடும் காட்டப்படக் கூடாது. இந்நாட்டில் எவரும் சட்டத்துக்கு மேலானவர்களும் அல்லர், கீழானவர்களும் அல்லர். சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள். நிறைவேற்று அதிகாரத்தின் விருப்பத்துக்கு ஏற்ப நீதித்துறையைச் செயற்படுத்த முடியாது. நீதித்துறையின் அதிகாரம் ஒடுக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது.

இந்தச் சந்தேகநபர் சுமார் 50 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்சாட்டுகள் இருந்தாலும், வழக்கு விசாரணை நடைபெறும் காலத்தில் பிணை வழங்கப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளன. இது இலஞ்ச ஊழல் தொடர்பான வழக்கு. இதற்கான அதிகபட்ச தண்டனை 10 ஆண்டுகள். அப்படியிருக்கையில், இந்த வழக்கில் ஏன் பிணை வழங்க முடியாது?

சந்தேகநபரின் தாயும் தந்தையும் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளனர். அவரது தாயாருக்கு நேற்று இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தந்தையும் மிகவும் ஆபத்தான உடல்நிலையில் இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் பெற்றோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வது பிள்ளையொருவரின் பொறுப்பாகும்.

இவற்றை ஏன் விசேட சூழ்நிலைகளாகக் கருத முடியாது என்பது எனக்குப் புரியவில்லை. எனவே, இக்காரணங்களை விசேட சூழ்நிலைகளாகக் கருத்திற்கொண்டு சந்தேகநபருக்குப் பிணை வழங்குமாறு கோருகிறேன் என்றார்.

இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களைக் கவனத்தில் கொண்ட பிரதான நீதவான், பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவை எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி அறிவிப்பதற்கு உத்தரவிட்டார்.

ஜானகி சிறிவர்தன பணிப்பாளராகச் செயற்பட்ட கிரிஷ் நிறுவனத்திடமிருந்து நாமல் ராஜபக்‌ஷவுக்கு 70 மில்லியன் ரூபா பணம் இலஞ்சமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவும், கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தனவும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரஷ்யா - உக்ரைன் போரில் வடகொரியாவின்...

2026-11-10 11:39:32
news-image

வடக்கின் கடந்தகால சமூக நீதிப் போராட்டங்களும்...

2026-11-08 14:45:48
news-image

அரசாங்கத்தை பாதுகாக்கிறதா எதிரணி 

2026-11-08 13:35:10
news-image

புதுடெல்லி முதல் அட்லாண்டா வரை: இந்தோ-பசிபிக்...

2026-11-04 11:07:25
news-image

பனிப்போரின் உலகளாவிய வரலாற்றுப் பாடம் : ...

2026-11-03 15:28:23
news-image

ஞானசார தேரர் விடுவிக்கப்படுவார்

2026-11-01 16:37:39
news-image

புதிய இரு சட்­ட­மூ­லங்­களும் குடி­மக்­களின் உரி­மை­க­ளுக்கு...

2026-11-01 09:21:56
news-image

ஐரோப்பிய குளிர்காலம் : இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு...

2026-10-29 13:37:03
news-image

கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்‌ஷவின் பிணை...

2026-10-28 17:27:38
news-image

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் மீண்டும் கொந்தளிப்பு...

2026-10-27 14:58:36
news-image

அர­சாங்­கத்­துக்கும் பிக்­கு­மா­ருக்கும் இடை­யி­லான தக­ராறு எங்­குபோய்...

2026-10-25 17:16:00
news-image

அரசின் இராஜதந்திரத் தவறு 

2026-10-25 16:17:39