இலங்கை வனவிலங்கு மற்றும் தாவர வளர்ப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ் நாட்டிலிருந்து வெளிக்கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த கடல் விலங்கு மற்றும் மூலிகைத் தாவரங்களின் பகுதிகள் சிலவற்றை சட்டவிரோதமாக நாட்டிலிருந்து கடத்திச் செல்ல முற்பட்ட சீன பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த 29ஆம் திகதி சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 35 வயதுடைய சீன பிரஜை தனது பயணப் பையினுள் கடல் விலங்கு மற்றும் மூலிகைத் தாவரங்களின் பகுதிகள் சிலவற்றை  மிக லாவகமாக மறைத்து வைத்திருந்தார் என சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரிடமிருந்து 322,000 ரூபா பெறுமதியான மழைக் கூடுகள் 900 கிராம், உலர்ந்த கடல் வெள்ளரி 1 கிலோ கிராம், 100 கடற் குதிரைகள் மற்றும் கொதல ஹிம்புட்டு 3 கோப்பைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த கடத்தல் நடவடிக்கை தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்ற நிலையில் கைப்பற்றப்பட்ட பொருட்களை அரசுடமையாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.