இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவர் மீதும் ஊக்க மருந்து சோதனைகளை நடத்தப் போவதாக இந்திய விளையாட்டுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது. 

இதற்கான பூரண உரிமையையும் அதிகாரத்தையும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகவரகத்துக்கு வழங்கியிருப்பதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட வேண்டும் என்று உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு இந்திய விளையாட்டுத்துறை அமைச்சுக்குத் தெரிவித்திருந்தது. 

இது குறித்து உடனடியாக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாதவிடத்து, தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகவரத்துக்கான அங்கீகாரத்தை இரத்துச் செய்வதாகவும் அது எச்சரித்திருந்தது.

இதையடுத்து, உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் சகல விதிமுறைகளையும் ஒழுங்காகப் பின்பற்றுமாறு இந்திய விளையாட்டுத் துறை அமைச்சு விளையாட்டு அமைப்புகளுக்குத் தெரிவித்துள்ளது.

இதன்படி, கிரிக்கெட் வீரர்களும் போட்டிகளுக்கு முன்னதாக ஊக்க மருந்து சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இந்திய கிரிக்கெட் சபைக்கு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் சபை ஒரு பொது அமைப்பு என்பதால் கட்டாயமாக விளையாட்டுத்துறை அமைச்சின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், அப்படிப் பின்பற்றத் தயங்கும் சந்தர்ப்பத்தில் அவ்வமைப்பின் மீது வழக்குத் தொடரப்படும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது

முதற்கட்டமாக, இந்திய கிரிக்கெட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளில், அணி வீரர்கள் அனைவரும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும், படிப்படியாக வெளிநாடுகளில் விளையாடும் இந்திய அணியும் சோதனைக்கு உள்ளாக்கப்படும் என்றும் விளையாட்டுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.