மாணவர்களின் வினைத்திறன்மிக்க கற்றலின் தொடர்ச்சியான செயற்பாடுகளில் குடும்ப பொருளாதாரக் காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. கல்வியில் சமவாய்ப்புக்கள் மற்றும் தேடிக்கற்றல் எனும் கொள்கைகள் கொண்ட எமது நாட்டில் ஒவ்வொரு மாணவர்களினதும் வெவ்வேறு அளவுகொண்ட வினைத்திறன் மிக்க கற்றலை குடும்பம் சார் பொருளாதாரம் தீர்மானித்துவிடுகின்றது.
பிள்ளைகள் வீட்டில் கற்பதற்கான பொருத்தமான நவீன சூழலின்மை, குடும்ப மாதாந்த வருமானம் போதாமை, பணத்தேவைக்காக பிள்ளைகளை மாலை வேளைகளில் தொழிலுக்கு அனுப்புதல், பெற்றோர் வெளிநாடு செல்லுதல், போஷாக்கான உணவு உட்கொள்ளாமை போன்ற பொருளாதாரத்தினை மையமாகக்கொண்ட காரணிகளினால் பிள்ளைகள் வீட்டிலும், பாடசாலைகளிலும் வினைத்திறன் கொண்ட செயற்பாடுகளை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி தம்மை முழுமையாக கல்விக்கு அர்ப்பணித்துக்கொள்வதில்லை.
ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவர்கள் தொடர்ச்சியாக கல்வியைக் கற்க விருப்பமுடையவர்களாக இருந்தும் கற்றலுக்குத் தேவையான முறையான வீட்டு வசதிகள் கிடைக்காமை, பெற்றோரின் அக்கறையின்மை, வறுமை போன்ற பல காரணிகளால் கற்றலின் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை முறியடித்துவிடுகின்றன.
உளவியல் ரீதியாக நோக்கும்போது கற்றல் கொள்கைகளின் படி மாணவர்களுக்கான தேவைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் போதுதான் முழுமையான நடத்தை மாற்றத்தினை கற்றலினூடாகப் பெறமுடியும். இவை இன்று பொருளாதாரத்தினை அதிகம் கொண்ட பிள்ளைகளுக்கு மட்டும் சாத்தியப்படுகின்றது.
கல்விச் சமத்துவம் எனும் பல்வேறு இலக்குகளை பாடசாலை எனும் நிறுவனத்தினூடாக நிறைவேற்ற வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு இன்றைய கல்வியின் குறிக்கோளாகும். ஆனால் சமனற்ற குடும்ப பொருளாதாரத்தின் சிக்கல் நிலைகளால் மாணவர்கள் கல்வியைப் பெறுவதில் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேரிடுகின்றது. வசதி கொண்ட பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளுக்கு பிரத்தியேகமாக செலவுகளை மேற்கொண்டு கற்றலின் வினைத்திறன் செயற்பாடுகளை அதிகப்படுத்தும் ஒருபக்கம் வறுமை நிலையில் வாழும் பிள்ளைகள் வீட்டில் கல்வி கற்பதற்கான வாய்ப்பே இல்லாமல் சிக்கித்தவிக்கும் இன்னொரு பக்க நிலைமையே காணப்படுகின்றது. மாணவர்களை மையமாகக் கொண்டே ஒரு நாடு ஊட்டம் பெறுகின்றது. இதற்காகவே ஒவ்வொரு பாடசாலையும் உயிர்ப்பான குறிக்கோள்களுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இன்றைய நவீன காலகட்டத்தினை நோக்கும் போது சமூகத்தில் இடம்பெறும் ஒவ்வொரு செயற்பாடுகளும் பொருளாதார அடிப்படையிலேயே இடம்பெறுகின்றன. ஆரம்பகாலத்தில் சேவை அடிப்படையில் வழங்கிவந்த கல்வி இன்று பொருளாதாரத்தினை நோக்கிச் செல்கின்றது. மாணவர் மையக்கல்வியை நிறைவு செய்வதில் குடும்பம் தமது பங்களிப்பினை பொருளாதார ரீதியல் வழங்கவேண்டிய பொறுப்புக்கள் காணப்படுகின்றன.
ஆனால் வீட்டுப் பொருளாதாரக் காரணிகளின் சிக்கலான நிலைமைகள் பிள்ளையின் கற்றல் விருத்திக்கு தடையாகவும் உள்ளன. அதாவது பிள்ளையின் அடிப்படைத் தேவைகள் குடும்பத்தால் நிவர்த்தி செய்யப்படாமை வினைத்திறன் மிக்க கல்வியை வறிய மாணவர்கள் பெறமுடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. இன்று வகுப்பறையில் மாணவர்கள் தமது குடும்பப் பொருளாதாரத்தின் சமத்துவமற்ற நிலைமை மாணவர்களின் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிசெய்கின்றது.
பல்கலைக்கழக அனுமதியில் போட்டி நிலவுகின்ற சூழலில் பிரத்தியேக போதனைகளை மாணவர்கள் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. திறமை அடிப்படையில் வேலை வாய்ப்புக்கள் இன்று மாணவர்கள் பாடசாலைக்கல்வியை மட்டும் நம்பியிருக்காது எத்தனை மேலதிக வகுப்புக்களுக்குச் செல்ல முடியுமோ அத்தனை வகுப்புக்களுக்கும் செல்லத்தூண்ட வைக்கின்றது. பொருளாதாரத்தில் வசதிகொண்ட மாணவர்கள் இவ்வாய்ப்புக்களை மட்டுமல்லாமல் வலயத்தளங்கள் மூலம் தமக்கு வேண்டியதை பதிவிறக்கம் செய்யவும், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் தமது குடும்பத்தின் பணபலத்தினை துணையாகக் கொள்கின்றனர்.
கல்வியில் சமத்துவம், கல்வியில் சமவாய்ப்புக்கள், இலவசக்கல்வி எனும் அடிப்படை கல்விக்கொள்கைகள் காணப்படும் எங்களுடைய நாட்டில் இன்று கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டாலும் அவை சகல பிள்ளைகளுக்கும் சாத்தியப்பட வேண்டும். பொருளாதாரப் பலம் கொண்ட மாணவர்களுக்கு மட்டும் சாத்தியப்படக்கூடாது. இன்று வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் வாழும் பிள்ளைகள் தமது குடும்ப வறுமை காரணமாக தமது உடலையும், உள்ளத்தினையும் வருத்திக்கொண்டு கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை ஒன்று வருவதனை தடுக்கவேண்டும்.
கல்வி என்பது அனைத்து மாணவர்களினதும் உரிமை. ஆனால் தாழ்நிலை குடும்பப் பொருளாதாரம் காரணமாக மாணவர்களின் கல்வி உரிமை மறுக்கப்படக்கூடாது. பாடசாலைக்கல்வி தவிர்ந்த ஏனைய முறைகளில் பெற்றுக்கொள்ளும் கல்வியில் வினைத்திறன் கொண்ட மேலதிக செயற்பாடுகள் அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியப்பட வேண்டும். வறிய மாணவர்களின் கற்றலில் குடும்பப் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது. அத்தோடு குடும்பப் பொருளாதார கஷ்டத்தினால் கல்வி இடைநிறுத்தப்படக்கூடாது. வீட்டுக்கற்றல் சூழ்நிலை பாடசாலைக்கற்றல் சூழ்நிலைக்கு ஒத்த தன்மையாகக் காணப்படல் வேண்டும். அப்போது தான் உயிரோட்டம் கொண்ட கற்றலை மாணவர்கள் பெறுவர். இவ்வாறாக இவ்வாய்வின் அவசியம் தேவைப்படுகின்றது.
மாணவர்கள் தமது எதிர்கால வாழ்க்கை தொடர்பாக முடிவெடுக்கும் காலகட்டத்தில் வாழ்பவர்கள். இவர்களுக்கு கல்வி கற்பதற்கான சிறந்த சூழலினை குடும்பம் வழங்க வேண்டும். இதில் பொருளாதார அம்சங்களோடு மாணவர்கள் இணைக்கப்படக்கூடாது. கல்வி அறிவில் குறைந்த அல்லது நடுத்தர நிலையிலுள்ள பெற்றோர் தங்களது பிள்ளைகளை பரம்பரையான தொழில்களில் ஈடுபடுத்துகின்றனர் (விவசாயம், மீன்பிடித்தல், நகை) கல்வி அறிவில் பின்தங்கிய பெற்றோர் தங்களது பிள்ளைகளை வேலைகளில் ஈடுபடுத்துவதற்காக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதோடு வறுமையைப்போக்க வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
தந்தைக்கு தொழில் இல்லாமல் தாய் தலைமைவகிக்கின்ற சில வீடுகளில் தாய் வேலைக்குச் செல்வதனால் பிள்ளைகளை சரியான முறையில் கவனம் செலுத்தமுடியாமையால் வினைத்திறன் தன்மைகள் மட்டுப்படுத்தப்பட்டு கல்வி அலட்சியமாக்கப்படுகின்றது. பாடசாலைகளில் உரிய கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் மாணவர்கள் பிரத்தியேக வகுப்புக்களுக்கு சென்று கற்கின்றனர். ஆனால் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு அவை கானல் நீர்போன்றாகிவிடுகின்றது. பிரத்தியேக வகுப்புக்களின் இக்கால கட்டணங்களின் உயர்ச்சி வறிய மாணவர்களின் மேலதிக கல்விக்கான செயற்பாடுகளை முடக்கிவிடுகின்றது. அந்தவகையில், மாணவர்களின் வினைத்திறனான கற்றலுக்குத் தேவையான மேலதிக ஊக்கம் கொடுக்கும் குடும்ப பொருளாதாரக் காரணிகளைப் பெற்றுக்கொடுத்தல், மாணவர்களின் வினைத்திறன் மிக்க கல்வி முன்னேற்றத்தைக் குறைப்பதில் உள்ள ஆசிரியர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தல், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் வினைத்திறனான கற்றலைப் பாதிக்கும் காரணங்களைக் கண்டறிந்து பெற்றோருக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல், கல்வியில் சமவாய்ப்புக்கள் எனும் பதத்தினை படுத்தல், கல்வியில் சமவாய்ப்புக்கள் எனும் பதத்தினை உறுதியானதோர் நிலைக்குக் கொண்டுவருதல் போன்றவற்றினை தீர்வுச் செயற்பாடுகளாக முன்வைக்கலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM