பதினேழு வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஃபிஃபா உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் முதன்முறையாக இங்கிலாந்து அணி வெற்றிவாகை சூடியது. நேற்று (28) நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயினை எதிர்த்தாடிய இங்கிலாந்து அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்தது.

இப்போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா, யுவபாரதி மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயினின் கை ஓங்கியிருந்தது.

ஆட்டம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே ஸ்பெயினின் சேர்ஜியோ கோமஸ் தனது அணி சார்பில் முதல் கோலைப் பதிவு செய்தார். அடுத்து, 31வது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் கோமஸ் தனதாக்கிக்கொண்டார்.

எனினும், கோமஸ் உள்ளிட்ட ஸ்பெயின் அணியினரின் வெற்றிக் களிப்பு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அணியின் திறமையான ஆட்டத்தால் அடுத்தடுத்து ஐந்து கோல்களைப் பதிவு செய்தது இங்கிலாந்து.

இதன்மூலம், 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து அணி முதன்முதலாகத் தனதாக்கிக் கொண்டது.

அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்ற பிரேசில் அணி, மற்றொரு ஆட்டத்தில் மாலி அணியைத் தோற்கடித்து மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டது.

இவ்வாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியிலும் இங்கிலாந்து அணியே வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.