இராமேஸ்வரம், மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த இலங்கை இளைஞர் ஒருவர், தனது உடலில் தானே கத்தியால் கீறி போராட்டம் நடத்தினார்.

அஜய் (24) என்ற இந்த இளைஞர் கொழும்பைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. பெற்றோரை இழந்த இவர், 2015ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். அவரை தமிழக அதிகாரிகள் மண்டபம் முகாமில் தங்க வைத்தனர்.

எனினும், கடந்த வருடம் மார்ச் மாதம் அஜய் திடீரென்று முகாமில் இருந்து தலைமறைவானார். அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாகவே இருந்தது.

இந்த நிலையில், நேற்று (28) மீண்டும் மண்டபத்துக்கு வந்த இவர், தன்னை முகாமில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் பெரும் ஏமாற்றத்துக்குள்ளான அஜய், திடீரென்று தன் கை, கால், வயிற்றுப் பகுதிகளில் கத்தியால் கீறிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து பொலிஸார் அஜய்யை இராமநாதபுரம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.