சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனின் மரண தண்டனைத் தீர்ப்பை சவூதி அரேபிய உச்சநீதிமன்றம் இரத்துச் செய்திருக்கின்றது. இது ஒரு மிகப்பெரிய ஆறுதலை அவரது குடும்பத்தாருக்கும் இலங்கை மக்களுக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை மக்கள் மட்டுமன்றி உலக நாடுகளில் வாழ்கின்ற மக்களும் நிம்மதி அடைந்திருக்கின்றனர், மன ஆறுதலைப் பெற்றிருக்கின்றனர்.
குறைந்தபட்சம் அனோஜனின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது என்பது மிகப்பெரிய ஓர் இராஜதந்திர ரீதியான வெற்றியாகவும் ஆறுதலாகவும் காணப்படுகிறது. கடந்த 13 ஆம் திகதி சவூதி அரேபிய உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வெளியிட்டிருக்கிறது. சவூதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனைத் தீர்ப்புக்கு எதிராக இலங்கை முன்னெடுத்த இராஜதந்திர நகர்வு மற்றும் சவூதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டுக்கமைய இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
கல்முனையைச் சேர்ந்த 27 வயதான சிவராசா அனோஜன், இந்த மரண தண்டனையை எதிர்கொண்டிருந்தார். அவர் முகநூலில் பதிவிட்ட ஒரு பதிவின் மூலம் இறைநிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அதன்படி அவருக்கு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு முதலில் ஐந்து வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதற்கு எதிராக மேல்முறையீடு செய்தபோது அது மரண தண்டனையாக மாற்றப்பட்டது.
இந்நிலையில் அவரை விடுவிக்கும் முயற்சியுடன் இலங்கையிலிருந்து சவூதிக்கு விஜயம் செய்த சட்டத்தரணிகள் குழு, சவூதி தூதுவர் மற்றும் ஜித்தா நகர கொன்சியூலர் ஆகியோர் இணைந்து சவூதி அரேபிய சட்டத்தரணிகள் ஊடாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டை தாக்கல் செய்திருந்தனர். அந்த மேல்முறையீட்டு விசாரணையின் போது மரண தண்டனையை இரத்து செய்யும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.
ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மற்றும் உபுல் குமாரப்பெரும, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாபி, சட்டத்தரணி ஹபீஸ் பாரிஸ் ஆகியோர் அடங்கிய சட்டத்தரணிகள் குழு, சவூதிக்கு சென்று சவூதி அரேபிய சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து, இந்த மேன்முறையீட்டு மனுவுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. சவூதிக்கான இலங்கை தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத், ஜித்தா கொன்சியூலர் ஆகியோருடன் இணைந்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
பரந்துபட்ட இராஜதந்திர முயற்சிகளின் பிரகாரம் தற்போது அனோஜனுக்கான மரண தண்டனை இரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், ஏற்கெனவே கீழ் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டிருந்த ஐந்து வருட சிறைத் தண்டனை மற்றும் தண்டப்பண தண்டனை இன்னும் அமுலில் இருக்கிறது. அதனை குறைத்து அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்னெடுக்கப் போகிறார்கள், அதற்கு அரசாங்கம் எவ்வாறான அனுசரணையினை வழங்கப் போகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அரசாங்கம் இந்த விடயத்தில் மேற்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது. அதேபோன்று சகல தரப்பினரும் சமூகங்களும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தியிருந்தனர். சர்வதேச மட்டத்திலும் கிட்டத்தட்ட கடந்த ஒரு மாத காலமாக அனோஜனின் விவகாரம் பேசுபொருளாக இருந்தது. சகல தரப்பினரும் அனோஜனுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தியிருந்தனர். குறிப்பாக சர்வதேச மன்னிப்பு சபை, அனோஜனுக்கு மன்னிப்பை பெற்றுக் கொடுங்கள் என்று திட்டவட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதேபோன்று மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல அமைப்புகளும் அனோஜனின் மரண தண்டனை இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன.
அனோஜனின் குடும்பத்தாருடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பேச்சு நடத்தியிருந்தார். அரசாங்கம் மட்டுமன்றி சிவில் சமூக அமைப்புகளும் சிவில் சமூக பிரதிநிதிகளும் இந்த விடயத்தில் மிகத் தீவிரமாக செயற்பட்டிருந்தனர். எப்படியிருப்பினும் அனோஜனின் விடுதலைக்காக உழைத்த சகலருக்கும் நன்றிகள் சென்றடைய வேண்டும். இதில் யாருக்கும் கூடுதல், குறைதல் என்ற விடயம் இல்லை. சகலரும் இந்த விடயத்தில் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள், முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதி, சவூதி அரேபியாவிற்கு முதலில் நன்றி தெரிவித்திருக்கின்றார்.
இங்கு 27 வயதான ஓர் இளைஞனின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. அது ஒரு மிகப்பெரிய விடயமாகவே இருக்கிறது. இது ஒரு சாதனை என்றே கூற வேண்டும். இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டதும் அனோஜனின் பெற்றோர் எந்தளவு தூரம் வேதனையுடன் இந்த விடயங்களை வெளிப்படுத்தினார்கள் என்பது சகலருக்கும் தெரியும். அந்த வகையில் தற்போது நிம்மதி பெருமூச்சு விடக்கூடிய ஒரு நிலைமை காணப்படுகிறது. மக்களின் பிரார்த்தனை, அவர்களின் கோரிக்கைகள், அவர்களது எண்ணங்கள் சாதகமாக நிறைவேறியிருக்கின்றன. ஆனால், இதற்கு பின்னர் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். அதேநேரம், மத ரீதியான விடயங்களை சமூக ஊடகங்களில் பகிரும் போதும் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த பாடமாக அமைந்திருக்கிறது.
இதனை ஒரு பாடமாக சகலரும் கற்றுக் கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் நாம் நினைத்த எல்லாவற்றையும் பகிர முடியுமா? எமக்குள் ஒரு சுயக் கட்டுப்பாடு வேண்டாமா? ஒழுக்க அணுகுமுறை இருக்க வேண்டாமா என்ற கேள்விகளை இங்கு சகலரும் எழுப்ப வேண்டும். தாம் நினைத்த எதனையும் பகிர முடியுமா? இன்னொருவரின் மத நம்பிக்கையை நாம் கேள்விக்கு உட்படுத்த முடியுமா? அதனை நாம் உதாசீனப்படுத்த முடியுமா என்ற கேள்விகளும் எழுகின்றன.
எனவே, சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிடும் போதும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். எமக்கு இருக்கின்ற அந்த சுதந்திரத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். சமூக ஊடகங்களில் ஒரு செல்வாக்கு செலுத்தக்கூடிய, அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடிய ஒரு தன்மை காணப்படுகிறது. அதனை சரியான முறையில் ஒழுக்கமாக பொறுப்புக்கூறலுடன் பயன்படுத்த வேண்டும்.
அதற்கு இந்த அனோஜனின் விவகாரம் ஒரு சிறந்த விடயமாக காணப்படுகிறது. அனோஜன்கூட அந்த கருத்தைப் பதிவிட்டு ஒரு சில மணி நேரத்தில் அந்தத் தவறை உணர்ந்து உடனடியாக மன்னிப்பும் கேட்டிருந்தார். ஆனால் அதற்கிடையில் நிலைமை கைமீறி சென்றுவிட்டது. எனவே இது போன்ற நிலைமைகள் எதிர்காலத்தில் வரக்கூடாது. இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த பாடமாக இருக்க வேண்டும்.
இதில் இந்த தவறுகளிலிருந்து சகலரும் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். நாட்டுக்கு நாடு சட்டங்கள் வேறுபடுகின்றன. அந்த நிலையை சகலரும் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கையில் இருக்கின்ற சட்டம், சவூதி அரேபியாவில் இருக்கின்ற சட்டம், இந்தியாவில் இருக்கின்ற சட்டம் என்று ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று வேறுபடும். ஒரு நிகழ்வை பல்வேறு கோணங்களில் பல நாடுகள் பார்க்கும் சூழல் காணப்படுகிறது.
எனவே அவற்றையும் புரிந்துகொண்டு நாம் செயற்பட வேண்டும். ஒரு நாட்டில் சென்று நாம் தொழில் புரியும் போது அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் தொடர்பாக தெரிந்து கொள்வது அவசியம். அதனால் இந்த விடயத்தில் சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
அனோஜனுக்கு ஏற்பட்ட இந்த விவகாரம் என்பது துரதிர்ஷ்டவசமானது. மரண தண்டனை என்றபோது சகலரும் அச்சமடைந்து விட்டனர். எப்படியிருப்பினும் தற்போது அதிலிருந்து அவர் மீண்டு வரக்கூடியதாக இருக்கிறது. மேலும் இருக்கின்ற தண்டனையை குறைத்து அவர் நாடு திரும்ப வேண்டும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாகவும் அது இருக்கிறது. எனவே இதற்காக பாடுபட்ட சகலரும் பாராட்டப்பட வேண்டிய அதேநேரம் சமூக ஊடகங்கள் விடயத்தில் மிகவும் பொறுப்புடன் சகலரும் செயற்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM