ஜெயிலர் 2 - திரைப்பட விமர்சனம்

Published By: Digital Desk 2

16 Oct, 2026 | 02:49 PM
image

தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்

நடிகர்கள் : ரஜினிகாந்த், மிதுன் சக்கரவர்த்தி, எஸ் ஜே சூர்யா, வித்யா பாலன், யோகி பாபு, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, ரித்விக், மற்றும் மோகன்லால்-  சிவராஜ்குமார் -ஹிர்த்திக் ரோஷன்- விஜய் சேதுபதி ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர்.

இயக்கம் : நெல்சன் திலீப்குமார்

மதிப்பீடு : 3/5

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற 'ஜெயிலர்' படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் தயாராகி வெளியிடப்பட்டிருக்கிறது. ஏனைய வெற்றி பெற்ற திரைப்படங்களின் இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை கவராத நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் திலீப் குமார், அனிருத் கூட்டணி மாயாஜாலத்தை நிகழ்த்தி படைப்பை ரசிக்க வைத்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகத்தில் சர்வதேச அளவிலான சிலை கடத்தல் குற்றவாளி வர்மனை ( விநாயகன்) ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியன்( ரஜினிகாந்த் ) தீர்த்து கட்டும் போது, வர்மன், 'நான் தனியாள் இல்லை. எனக்கு பின்னால் மிகப்பெரிய நெட்வொர்க் இருக்கிறது. அது உன்னை சும்மா விடாது' என சொல்வார்.

இந்த இடத்திலிருந்து தான் ஜெயிலர் 2 படத்தின் கதை தொடங்குகிறது. வர்மனின் நண்பரான திலீப் ( சுராஜ் வெஞ்சரமூடு) ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியனை தன் பாணியில் தேடத் தொடங்குகிறார். 

இதற்கு இரண்டு கூலிப்படை கும்பல் டைகர் முத்துவேல் பாண்டியனை கண்டுபிடிக்கும் பணியில் இறங்குகிறது. இந்த தருணத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் தன் குடும்பத்தினருடன் மலை வாசஸ்தலப் பகுதி ஒன்றில் அமைதியாக வாழ்ந்து வருகிறார். 

இருப்பினும் தன் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதும் ஜெயிலர், வர்மனின் வலையமைப்பில் இருக்கும் ஏனைய கும்பலையும், அந்த கும்பலின் தலைவனையும் கண்டறிவதற்காக காய் நகர்த்துகிறார்.

இதற்காக அவர் தமிழக, கேரள மாநில எல்லைப் பகுதியில் பழக் கடை வைத்து நடத்தி வரும் மூர்த்தி( நமோ நாராயணா) என்பவரிடம் சாரதியாக பணிக்கு சேருகிறார். அதே தருணத்தில் கூலிப்படையின் தேடலில் துப்பு கிடைத்து, திலீப்பின் ஆட்கள் டைகர் முத்துவேல் பாண்டியன் வீட்டை கண்டுபிடித்து முற்றுகையிடுகிறார்கள்.

அதற்குப்பின் திலீப் மூலமாக சிலை கடத்தல் கும்பலுக்கு போதி கல்பக் ( எஸ் ஜே சூர்யா) மற்றும் அவரது தந்தை ( மிதுன் சக்கரவர்த்தி) தான் தலைமை என்பதை கண்டறிகிறார். அவர்களை ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியன் பொறியில் சிக்க வைத்து தீர்த்துக் கட்டினாரா? இல்லையா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

படத்தின் முதல் பாதியில் ரசிகர்களுக்கு உற்சாகமிக்க திரை விருந்து கிடைக்கிறது. எக்சன், மாஸ், கொமடி, பாடல்கள்  என பல அற்புதமான படமாளிகை அனுபவங்கள் ரசிகர்களுக்கு போனசாக கிடைக்கிறது. அதிலும் மூர்த்தி கதாபாத்திரத்தை வைத்து இயக்குநர் நெல்சன் நிகழ்த்தி இருக்கும் டார்க் ஹியூமர் அற்புதமாக வொர்க் அவுட் ஆகி, ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. இதில் யோகி பாபுவின் ரியாக்ஷனும், 'ஒன் லைன் பஞ்ச்'சும் கிரேட்.

இரண்டாம் பாதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இயக்குநர், கொமடியை கைவிட்டு விட்டு கோவா, வில்லன்கள், ஐட்டம் சாங், நட்சத்திர நடிகர்களின் திரை தோற்றம், மாஸ் எலிமெண்ட்- சென்டிமெண்ட் என பயணித்து ரசிகர்களை ஒருவாறு லாஜிக்கை பற்றி யோசிக்காமல் மேஜிக்கை நம்பி சமாளித்திருக்கிறார்.

உச்சகட்ட காட்சியில் ஜெயிலர் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான டிவிஸ்டை வைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இதை வைத்துப் பார்க்கும்போது இயக்குநர் நெல்சன், இயக்குநர் லோகேஷ் கனகராஜைப் போல் 'டைகர் முத்துவேல் பாண்டியன் யுனிவர்ஸை ' உருவாக்குவார் என எதிர்பார்க்கலாம்.

76 வயதானாலும் சூப்பர் ஸ்டாரின் திரை தோற்றம் மாஸாக இருக்கிறது. அந்த டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தை அசால்ட்டாக லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்திருக்கிறார். ஓய்வு பெற்ற சிறை துறை அதிகாரி கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு  தன்னுடைய ஸ்டைலான -மாஸான-  நடிப்பால் கடத்தி, பாராட்டை பெறுகிறார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

உச்சக்கட்ட காட்சியில் '50 வருஷமா யார் யாரோ என்னை முடிக்க ட்ரை பண்ணாங்க .. ஆனா யாராலயும் முடியல..' எனும் டொயலாக்... ரஜினி ரசிகர்களுக்காகவே வைத்து,  அவர்களின் பாராட்டை பெறுகிறார் இயக்குநர் நெல்சன். இது சமகால தமிழக அரசியலுக்கான 'பஞ்ச்' என்றும் சொல்லலாம்.

இதைத்தொடர்ந்து முதல் பாதியில் திலீப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு வித்தியாசமான உடல் மொழியால் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார்.  இரண்டாம் பாதியில் போதி கல்பக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ் ஜே சூர்யா தன் வழக்கமான வில்லத்தன நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். இவரது சகோதரி காந்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பொலிவுட் நடிகை வித்யா பாலன் குறைவான காட்சிகளில் தோன்றினாலும் தன் அனுபவம் மிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, ரித்விக், இயக்குநர் சொன்னதை மட்டும் செய்திருக்கிறார்கள்.

கடந்த கால பொலிவுட் முன்னணி நட்சத்திர நடிகரான மிதுன் சக்கரவர்த்தி குறைவான காட்சிகளில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே வந்தாலும் தன் கம்பீரமான வில்லத்தனத்தை காட்டி ரசிகர்களை வசப்படுத்துகிறார்.

சிறப்பு தோற்றத்தில் தோன்றும் மோகன்லால்- ஹிர்த்திக் ரோஷன்- விஜய் சேதுபதி- ஜாக்கி ஷெரஃப்- ஆகியோரை விட சிவராஜ் குமாருக்கு கூடுதல் காட்சிகள் வழங்கப்பட்டிருக்கிறது. அவரும் தன்னுடைய பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார்.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- இயக்குநர் நெல்சன் ஆகியோரது கூட்டணிக்கு அனிருத் தன் தனித்துவமான பின்னணி இசையை வழங்கி, ரசிகர்களுக்கு அற்புதமான பட மாளிகை அனுபவத்தை வழங்குகிறார். ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் இடம் பெற்ற பாடல் -தீம் மியூசிக் ஆகியவற்றை இரண்டாம் பாகத்திலும் பயன்படுத்தியிருப்பது சிறப்பு. 'அலா பொல்லேலோ..' பாடலும் , 'பிந்தாஸ்..' பாடலும் ரசிகர்களுக்கு  உத்வேகத்தை அளிக்கிறது.

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும் , நிர்மலின் படத்தொகுப்பும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அள்ளித் தருகிறது.

இரண்டாம் பாதியில் இடம் பிடித்திருக்கும் சென்டிமென்ட் காட்சிகள்.. ரசிகர்களுக்கு அந்த உணர்வை துல்லியமாக கடத்தவில்லை.

இதனால் உச்சகட்ட காட்சியில் நடைபெறும் மாஸான எக்சன் காட்சிக்கு ரசிகர்களின் கரவொலி குறைவுதான். 

ஜெயிலர் 2 - ஜென் ஸீ ஹீலர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜீ வி பிரகாஷ் குமாரின் 'அன்புடன்...

2026-11-17 13:29:12
news-image

துல்கர் சல்மான் நடிக்கும் 'ஏ ஓ...

2026-11-17 13:28:55
news-image

அறிமுக நடிகர் ஷாகிர் மனோ நடிக்கும்...

2026-11-17 13:28:38
news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'சத்தியவான் சாவித்திரி'...

2026-11-17 13:28:09
news-image

டிசம்பரில் வெளியாகும் பிரபு தேவாவின் 'மூன்...

2026-11-17 13:15:45
news-image

நடிகை ராஷ்மிகா மந்தானா நடிக்கும் 'மைசா'...

2026-11-17 13:15:55
news-image

தெலுங்கு திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் நடைபெற்ற...

2026-11-17 13:16:44
news-image

நடிகர் இனிகோ பிரபாகர் நடிக்கும் 'மின்னும்...

2026-11-17 13:15:13
news-image

அஜித் குமாருடன் இணைந்த கன்னட சுப்பர்...

2026-11-16 15:05:46
news-image

'மொத ராத்திரி' பட நடிகர் டி...

2026-11-16 14:41:56
news-image

ஓவியா நடிக்கும் 'கிளிக்' படத்தின் தொடக்க...

2026-11-16 14:27:07
news-image

உண்மை சம்பவத்தை தழுவி தயாராகி இருக்கும்...

2026-11-16 14:20:38