யேமன் நாட்டின் ஏடன் நகரில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மீது நேற்று வியாழக்கிழமை (15) ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக யேமன் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யேமன் அரசுப் படைகள் மற்றும் சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டமைப்பு பயன்படுத்தும் அல்-மாஷிக் மாளிகை வளாகத்திற்குள் அமைந்துள்ள இராணுவக் கட்டளை மையங்களே இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.
தளத்தைப் பாதுகாத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் உத்தியோகத்தர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக யேமன் சுகாதார அமைச்சர் காசிம் புஹைபே உறுதிப்படுத்தியுள்ளார்.
தாக்குதல் நடைபெற்ற போது யேமன் பிரதமர் ஷயா அல்-ஜிந்தானி மாளிகையில் இருந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றித் தப்பியுள்ளதாக அரசாங்க அமைச்சர் ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். பிரதமர் இந்த தாக்குதலை ஒரு "கோழைத்தனமான" செயல் என கடுமையாகக் கண்டித்துள்ளார்.
யேமன் அரசாங்கப் படைகள் பயன்படுத்தும் கட்டளை மையத்தின் மீது மூன்று ஏவுகணைகளும், சவூதி கூட்டமைப்புப் படைகள் பயன்படுத்தும் மையத்தின் மீது இரண்டு ஏவுகணைகளும் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டதாகக் கூறப்படும் அல்-மாஷிக் மாளிகையின் இராணுவ நடவடிக்கைகளின் தலைமையகம் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதரவு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பல ஆண்டுகளாக நீடித்த போர் நிறுத்தம் முறிந்ததை அடுத்து, யேமனில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு தலைநகர் சனாவை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு ஆதரவாக 2015 இல் சவூதி கூட்டமைப்பு தலையிட்டது.
யேமனுக்கு வெளியே சவூதி அரேபியாவிலும் ஹவுதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அக்டோபர் மாதத்தில் மட்டும் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது 20 முறை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சவூதி கூட்டமைப்பின் பேச்சாளர் துர்க்கி அல்-மாலிகி தெரிவித்துள்ளார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM