"நாளை சிதம்பரம் போவேன்...", "நாளை போவேன்..." - "நாளை நாளை நாளை..." என்று சிதம்பரம் கோயிலுக்குச் சென்று சிற்றம்பலநாதனான சிவனை தரிசிக்கப்போகும் அந்த ஒரு நாளுக்காக எதிர்பார்த்துக் காத்திருந்து நொந்துபோன, அதேசமயம் தனது இலக்கைக் கைவிடாது, வைராக்கியத்துடனும் தளராத மனதுடனும் சிதம்பரம் போய்த்தீர்வதெனத் தொடர்ந்து முயற்சித்து, ஒரு நாள் அந்தப் பெருந்தலத்தைச் சென்றடைகிறார் “திருநாளைப் போவார்" என்கிற நந்தனார்.
தமிழ்நாட்டில் 'தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்’ என்று அன்றைய சமூகத்தினரால் ஒதுக்கப்பட்ட ஒரு மனிதன், கோயில்களுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, பல தடைகளைச் சந்தித்து துன்பங்களை மட்டுமே சுமந்த நந்தன், நீண்ட நாள் போராட்டத்துக்குப் பின், இறுதியில் சிதம்பர தரிசனம் கண்டுவிட்ட மகானாக, பெரிய புராணத்தில் அறுபத்து மூவரில் ஒருவராக, “திருநாளைப் போவாராக” அறியப்படுகிறார். நந்தனார் கதையை இசை வடிவில் அமைத்து, “நந்தனார் சரித்திர கீர்த்தனைகளாக" உருவாக்கிய தமிழிசை மேதை கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடல்களை வயலினிசையிலும் வாய்ப்பாட்டாகவும் “சாயி ஸ்ருதி லயா" நுண்கலைக்கூட மாணவர்கள் அளித்த நெடும் இசைப்படைப்பு மன நிறைவைத் தந்ததாக அரங்கு ஒருமித்துப் பாராட்டியது.
சாயி ஸ்ருதி லயா நுண்கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் “நந்தனார் சரித்திரம்" கர்நாடக இசை நிகழ்வு கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் கடந்த 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
நுண்கலைக்கூடத்தின் ஸ்தாபகர் ‘கலை இளவரசி’ வைத்திய கலாநிதி சாயிலக்ஷ்மி லோகீஸ்வரனின் வழிநடத்தலில் அவரது மாணவர்கள் பங்கேற்று, தமது ஆற்றலுக்குட்பட்ட இசைத்திறமையை நிரூபித்தனர் என்றால் மிகையல்ல.





நந்தனார் சரித்திரத்துக்காக கோபாலகிருஷ்ண பாரதியார் யாத்த வரிகளையும் அதனுள் பொதிந்த ஆழமான பொருளையும் ராக, தாள அம்சங்களையும் இளம் சிறார்களின் கொஞ்சல், குறும்பு, அதேசமயம் உணர்வுமயமான குரல்வழியே கேட்கவும் அவர்களது வயலின் மீட்டலைக் கண்டுகளிக்கவும் முடிந்தது.
அதுமட்டுமன்றி, மாணவர்களின் வாய்ப்பாட்டு, வயலினிசைக்கு மெருகூட்டும் விதமாக 'இசைச் செல்வர்’ வை. வேனிலானின் மிருதங்கமும் 'முதுகலைமானி’ சுவர்ணாங்கி சுகர்தனின் வயலினும் சேர்ந்துகொண்டது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் மருத்துவ நிபுணர் ஆர்.பிரதாபன் மற்றும் அவரது துணைவியார் பேராசிரியர் ஷாமினி பிரதாபன் (ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம்) ஆகியோரும் கௌரவ விருந்தினராக கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திராவும் கலந்துகொண்டனர்.

நுண்கலைக்கூட ஆசிரியயையின் நெறிப்படுத்தலில் வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்ட, நந்தனார் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கிய கட்டமும் பாடல்களாக, வயலின் வாத்திய இசையாக ஒலித்தது. ஒருசில கதைக்கட்டங்களை மாணவர்கள் நாடக வடிவில் நடித்தும் காண்பித்தனர்.
கோயில்களில் இசைக்கப்படும் முரசு, யாழ் போன்ற வாத்தியங்களைச் செய்து கொடுக்கும் வேலைகளைச் செய்து வந்த நந்தனாரை, எந்தவொரு கோயிலுக்குள்ளும் எவரும் அனுமதிப்பதில்லை. அவர், தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர் என்றொரு காரணத்தை மட்டுமே அன்றைய சமூகம் வலுவாக பற்றிப்பிடித்துக்கொண்டது.

நந்தனார் ஒரு நாள் திருப்புன்கூரில் உள்ள சிவன் கோயிலின் மூலவரை தரிசிப்பதற்காகச் சென்று, கோயில் வாசலில் நின்றவாறே வணங்கினார். அப்போது அவருக்கு முன்னால் இருந்த நந்தி சிலை, அவர் மூலவரை காண முடியாதபடி மறைத்தது. சிவனை வணங்க முடியாமல் நந்தனார் அவதிப்பட்டார், மனம் வருந்தினார். உடனே சிவன் நந்திதேவனுக்கு கட்டளையிட, நந்தி சிலை விலகி நின்றதாக புராணக் கதை சொல்கிறது. இந்தக் காட்சியை மாணவர்கள் நாடகத்தில் கொண்டுவந்தனர்.
அவ்வேளை திரைக் காணொளியில், சந்நிதிக்கு முன்னால் இருந்த நந்தி சிலை விலகிய காட்சி வந்ததும் பார்வையாளர்களின் கவனம் ஏககணத்தில் திரும்பியது. அப்போது, “வழி மறைத்திருக்குதே, ஒரு மலை போலே மாடு படுத்திருக்குதே..." என்றொரு பாடல் பாடப்பட்டது.

சிதம்பரம் செல்லவேண்டும் என்ற தனது வாழ்நாள் ஆசையை நந்தனார், தான் விவசாய வேலை பார்க்கும் நிலத்தின் உரிமையாளரிடம் சென்று கூறி, பயணிக்க விடுமுறை தருமாறு அனுமதி கேட்டார். அவர் மறுத்ததால், திரும்பத் திரும்ப அனுமதி கோரினார். அதற்கு அவர், “நீயெல்லாம் எப்படி சிதம்பரத்துக்கு போகமுடியும்" என்று கிண்டல் தொனிக்க கூறினார். நில உரிமையாளர் மிகக் கடுமையாக நந்தனாரை திட்டித்தீர்த்தார்.
அந்த நொடியில் நந்தனாருக்குள் ஏற்பட்ட உணர்வை வெளிப்படுத்துவதாக, சோக ரசமே கொண்ட முகாரி ராகத்தில் “சிதம்பர தரிசனமா, நீ அதைச் சிந்திக்கலாமோ பறையா…" என்ற பாடல் வயலினில் இசைக்கப்பட்டது. பொதுவாக ஒப்பாரிப் பாடல்களுக்காகவே அறியப்பட்ட முகாரி ராகம் வயலின் வழியாகப் புறப்பட்டதும் அதன் ஆரம்ப வரிகளை ஆசிரியை சாயிலக்ஷ்மி லோகீஸ்வரன் நெகிழ்ந்து பாடியதும் மிகச் சிறப்பு.
“நீ சிதம்பரம் செல்லவேண்டுமென்றால், நாற்பது வேலி நிலத்தை (கிட்டத்தட்ட 250 ஏக்கர்) ஒரே நாளில் தனி ஒரு மனிதனாக, நீ அறுவடை செய்யவேண்டும்" என்று நந்தனாருக்கு நில உரிமையாளர் வேண்டுமென்றே கட்டளையிட, நந்தனாருக்காக சிவனே இறங்கிவந்து அறுவடை செய்துகொடுத்ததையும், விரும்பியபடி அவர் சிதம்பரம் சென்றது, நந்தனார் அக்னிப் பிரவேசம் செய்தது போன்ற அற்புத நிகழ்வுகளையும் நுண்கலைக்கூட மாணவர்கள் பாடல், நடிப்பின் ஊடாக எடுத்துக்காட்டினர்.

“ஆருக்குப் பொன்னம்பலன்..." என ஒரு மாணவியின் மயக்கும் தனிக்குரலில் ஒலித்த பாடலும் ஈர்க்கத்தக்கது.
நுண்கலைக்கூட ஆசிரியை சாயிலக்ஷ்மி லோகீஸ்வரன் நந்தனார் சரித்திரத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் கதை வடிவில் விளக்கிச் சொன்ன விதம் அருமை.
இந்நிகழ்வில் உரையாற்றிய விசேட வைத்திய நிபுணர் ஆர்.பிரதாபன் கூறுகையில்,
“நந்தனாரிடத்தில் என்னை மிகவும் கவர்ந்த விடயம் அவருடைய அசைக்கமுடியாத நம்பிக்கையே. பல தடைகள், ஏமாற்றங்கள் இருந்தன. ஆனால், அவருடைய இறை நம்பிக்கை மட்டும் ஒருபோதும் குறையவில்லை.
'நாளை சிதம்பரம் போகிறேன்' என்று அவர் தொடர்ந்து கூறினார். அந்த நாளை வருவதற்காகவும் அவர் காத்திருந்தார், முயன்றார். நம்பிக்கையுடன் இருந்தார். இறுதியில் அந்த ‘நாளை’யும் வந்தது. இது நம் வாழ்க்கைக்கும் மிகப் பெரிய செய்தியை தருகிறது.
சில நேரங்களில் நமது இலக்கை அடைவதற்கு நேரமாகலாம். சில தடைகள் வரலாம். சில நேரங்களில் நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நம்மை புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். நமது நம்பிக்கையை நாம் இழக்காமல் தொடர்ந்து முயற்சி செய்தால் நம்முடைய 'நாளை'யும் நிச்சயமாக வரும்.
நந்தனாரின் கதை வெறுமனே பக்தியின் கதை மட்டுமல்ல, நம்பிக்கை, பொறுமை, விடாமுயற்சி, மனித கண்ணியத்தின் கதை...." என்றார்.
அவரைத் தொடர்ந்து, உரை நிகழ்த்திய சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா இவ்வாறு கூறினார்:
“பணமோ அதிகாரமோ பதவியோ ஒருவரை முன்னிலைப்படுத்தாது. மனித மாண்பு என்பது தேவை. அதை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஒரு மனிதனின் உயர்வை தீர்மானிப்பது அவனுடைய பிறப்பல்ல, பிறப்பால் ஒரு மனிதன் உயர்வதுமல்ல, தாழ்வதுமல்ல. அவனது பண்பும் செயல்களுமே அவனுடைய மேன்மையை தீர்மானிக்கிறது. நந்தனாருயை பண்பும் மேன்மையும் நமக்கு இதனை எடுத்துக்காட்டுகிறது.
கோவிலில் இறைவனை பூக்களாலோ மாலைகளாலோ அர்ச்சிக்கும் நமது கைகள், உதவி தேடுகின்ற ஏழைகளுக்கு உதவும் கரங்களாகவும் இருக்கவேண்டும்..."
ஆக, பழம்பெரும் மரபையும் இளம் தலைமுறையையும் மனிதப் பண்புகளால் இணைக்கும் அற்புதப் பாலமாய், வாழ்வை நெறிப்படுத்தும் இசை வடிவமாக “நந்தனார் சரித்திரம்" அமைந்தது. பாராட்டுகள்!
- உருத்திரா
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM