ஆர்மேனியாவில் கரடிகளைக் காட்சிப்படுத்தும் வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரித்தானியத் தொண்டு நிறுவனம் ஒன்று முயற்சி செய்து வருகிறது.

கரடிகளை அவற்றின் சிறு வயதிலேயே பிடித்து வந்து கூண்டுக்குள் அடைத்து வைப்பதை பெரும்பாலான ஆர்மேனிய நிறுவனங்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

உணவகங்கள், பேருந்து நிறுத்தங்கள், வர்த்தக நிறுவனங்கள் எனப் பல இடங்களிலும் கரடிக் கூண்டுகளை சர்வ சாதாரணமாகக் காணலாம்.

எனினும், கரடிகளுக்கான உணவை அதன் உரிமையாளர்கள் வழங்குவதில்லை. பார்வையாளர்கள் கொடுக்கும் அல்லது மிச்சசொச்ச உணவுகளை உண்டே வாழ வேண்டிய சூழலில் இந்தக் கரடிகள் இருக்கின்றன.

சுதந்திரம் என்றால் என்ன என்றோ, கரடியின் பலம் மற்றும் அதன் வாழ்க்கை முறை என்றால் என்னவென்றோ அறியாமல் ஆயுள் முழுவதும் கூண்டுக்குள்ளேயே இருந்து உயிரை விடும் கரடிகளும் உண்டு.

தற்போது, இந்தக் கரடிகளை விலைக்கு வாங்கி அவற்றைக் காட்டில் விடும் முயற்சியை ‘சர்வதேச விலங்குகள் மீட்பகம்’ என்ற ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

ஒவ்வொரு கரடிக்கும் நான்காயிரம் யூரோக்கள் என்ற விகிதத்தில் செலவிட்டு அவற்றை இந்த நிறுவனம் மீட்டு வருகிறது.

அவற்றுக்கு புனர்வாழ்வளித்து மீண்டும் காட்டில் கொண்டு போய் விட இந்த நிறுவனம் ஏற்பாடு செய்து வருகின்றது.

என்றபோதும், வாழ்நாளில் பெரும்பாலான காலத்தை கூண்டுகளிலேயே கழித்துவிட்ட கரடிகளில் சில, காட்டுச் சூழலை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறி வருகின்றன.

இதனால், சுமார் 75 ஆயிரம் யூரோக்கள் செலவில், ஒரு பெரு நிலப்பரப்பை வாங்கி கரடிகளை சுதந்திரமாக விடும் திட்டத்தை அமுல்படுத்த மேற்படி நிறுவனம் முயற்சித்து வருகிறது.

“நாற்றமெடுக்கும் தண்ணீரில் நின்றுகொண்டு, எச்சில் உணவுகளை உண்டு, சிறு கூண்டுக்குள்ளேயே வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கரடிகள், சில சமயங்களில் கடும் எரிச்சலில் அதன் தலையை மரத்திலோ, நிலத்திலோ தொடர்ச்சியாக மோதி தனக்குத் தானே தண்டனை தருவதைக் கண்டிருக்கிறேன். அது காண்பதற்கே மிகக் கொடுமையானது” என்று, மேற்படி நிறுவனத்தின் இயக்குனர் அலன் நைட் தெரிவித்துள்ளார்.