தனது எதிர்ப்பையும் மீறி தனது மகள் திருமணம் முடித்துக்கொண்டதால் விரக்தியுற்ற தந்தை முகநூல் நேரலையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் துருக்கியில் இடம்பெற்றுள்ளது.

அய்ஹான் உஸுன் (54) என்பவர் துருக்கியின் கெய்ஸேரி பகுதியைச் சேர்ந்தவர். இவரது மகள் அண்மையில் திருமணம் செய்துகொண்டார். எனினும், குடும்பப் பிரச்சினை காரணமாக உஸுனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.

திருமணம் முடிந்த சிறிது நேரத்தின் பின், தங்களுடன் விருந்துண்ண வருமாறு குடும்பத்தினர் தன்னை அழைத்ததாகக் கூறிய இவர், தனது இடத்தில் இருந்து தனது மாமனாரே மகளின் திருமணத்தை நடத்தி வைத்ததாகக் கூறியிருக்கிறார்.

மேலும், மகளின் திருமணம் பற்றி தனக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று தன் மனைவியிடம் கேட்டபோது, அவருக்காக தனிப்பட்ட முறையில் வந்து சொல்லிக்கொண்டிருக்க நேரமில்லை என்று அவர் கூறியதாக உஸுன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

அவரது நேரலையைக் கண்டு அதிர்ச்சியுற்ற குடும்பத்தினர், உடனடியாக வீடு திரும்பினர். ஆனால் அதற்கிடையில் உஸுன் தன் முடிவைத் தேடிக்கொண்டார்.

நேரலையின்போது, தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய எவரும் தனது இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ளக் கூடாது என்று தான் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.