சிறைவைக்கப்படும் பிக்குகள் தொடர்பான சிறைச்சாலை விதிகளைப் புதுப்பிக்கும் செயற்முறையின் தற்போதைய நிலைமை

11 Oct, 2026 | 05:26 PM
image

கலகொட அத்தே ஞானசார தேரரின் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சிறையில் அடைக்கப்படும் பிக்குகளை சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லும்போது தற்போது பின்பற்றப்படும் நடைமுறை தொடர்பாக மகாநாயக்க தேரர்களினால் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான மத மற்றும் சமூக விடயங்கள் குறித்து முப்பீடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று கடந்த வியாழக்கிழமை (08) ஜனாதிபதி அலுலகத்தில் நடைபெற்றது.

தற்போதைய சிறைச்சாலை கட்டமைப்பு நிர்வகிக்கப்படும் 1877 ஆம் ஆண்டின் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் மற்றும் அதன் விதிகளுக்குள் பிக்குகளுக்காகத் தனித்துவமான விசேட விதிகள் தயாரிக்கப்படவில்லை என்றும், நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்பிற்குள்ளேயே அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

நடைமுறையிலுள்ள சட்டத்தை மீறி தனிநபர்களுக்காகக் கட்டளைகளைப் பிறப்பிக்கத் தான் தயார் இல்லை என்றும், சட்டத்தை தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்துவதே செய்யப்பட வேண்டியது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன்போது மகா சங்கத்தினர் சார்பில் கருத்துத் தெரிவித்த அனுநாயக்க தேரர்களும் பதிவாளர் தேரர்களும், பிக்கு ஒருவருக்கு இத்தகைய நிலைமை ஏற்படுவது முழு மகா சங்கத்தினருக்கும் சமூகத்திற்கும் மிகவும் சிக்கலான ஒரு விடயமாகும் எனச் சுட்டிக்காட்டினர்.

அதற்கமைய, ஏதேனும் ஒரு பிக்கு நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டு 03 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்திற்குச் சிறையில் அடைக்கப்படும் சந்தர்ப்பங்களில், அவர் சார்ந்த நிகாய அல்லது பிரிவிற்கு அது குறித்து அறிவித்து, அந்த நிகாய அல்லது பிரிவின் கருத்துக்களுக்கமைய அவர்களை  வெளியே அழைத்துச் செல்வதற்குப் பொருத்தமான வகையில் விதிகளைத் தயாரிப்பது பொருத்தமானது என மகா சங்கத்தினர் யோசனை தெரிவித்தனர்.

இதன் மூலம் இந்தச் சலுகையைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எவருக்கும் சந்தர்ப்பம் கிடைக்காது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இதற்கு முன்னர் வணங்கிய பிக்கு ஒருவரை இன்று வேறு ஒரு விதமாகப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படுவது பௌத்த மக்களுக்கும் மகா சங்கத்தினருக்கும்  அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்துவதை தான் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், இதுவரை இடம்பெற்ற நடைமுறை இதுவே என்றும், சட்டங்கள் என்பவை என்றென்றும் ஒரே இடத்தில் இருக்கும் வரலாற்றுக்கு அப்பாற்பட்டவை அல்ல என்றும், சட்டங்கள் தொடர்ந்து திருத்தப்படுபவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறன்றி, சட்டங்கள் அப்படியே இருக்கும்போது வேறுபட்ட கட்டளைகளை பிறப்பிக்க தான் தயார் இல்லை என்றும், அவ்வாறு செய்யும்போது சட்டம் ஓரங்கட்டப்பட்டு அது தனது சொந்தச் சட்டமாகிவிடும் என்றும், தனது விருப்பம் சட்டமாக மாறக்கூடாது எனத் தான் கருதுவதாகவும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

மேலும், மீண்டும் எந்தவொரு பிக்குவும் இத்தகைய நிலைமைக்கு ஆளாகக்கூடாது என்றும், அதற்காகத் தேவையான சட்ட விதிகளை விரைவாகத் தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இது தொடர்பாக மகாநாயக்க தேரர்களால் முன்வைக்கப்பட்ட யோசனையின் மூலம் வெளிப்படைத்தன்மை ஏற்படும் என்பதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதனைச் நடைமுறைப்படுத்துவதற்காகத் தேவையான சட்ட விதிகளை விரைவாகத் தயாரிக்குமாறும், இரண்டு வார காலத்திற்குள் அப்பணியை நிறைவு செய்யுமாறும் நீதியமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

மத ரீதியாக மிகவும் சிக்கலான இந்தப் பிரச்சினையில் உடனடியாகக் கவனம் செலுத்தி, சட்டப்பூர்வமான மற்றும் நடைமுறைச் தீர்வுகளை வழங்குவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் எடுத்த உடனடி நடவடிக்கைகளை மகா சங்கத்தினர் பாராட்டியதுடன் தமது நன்றியையும் தெரிவித்தனர்.

ஜனாதிபதியிக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இந்த சிக்கலான பிரச்சினை குறித்து விரைவாக ஆராய்ந்து சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக கடந்த 08 ஆம் திகதியே 05 உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீரவின் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில், நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமந்தி பீரிஸ், பொது நிர்வாக அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த ஆரியரத்ன, பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜி. சேனாரத்ன மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஒருவரான ஏ.சி. கஜநாயக்க ஆகிய உயரதிகாரிகள் உள்ளடங்குகின்றனர்.

இந்த விசேட குழுவின் முதலாவது கூட்டம் அதன் தலைவரான புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின்  செயலாளர் பிரின்ஸ் சேனாதீரவின் தலைமையில் கடந்த 09 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றதுடன், அதற்கான  கொள்கை வழிகாட்டுதல்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார வழங்கினார்.

அக்குழு இரண்டு வாரங்களுக்குள் உரிய ஆய்வை மேற்கொண்டு புதிய விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைத் திருத்துவதற்கான யோசனைகளைச் சமர்ப்பிக்கவுள்ளதுடன், அத்திருத்தங்களில் பிக்குகள் தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் வாரத்தின் நடுப்பகுதியில் மகா சங்கத்தினரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த விதிகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுவதுடன், அதற்கமைய இனிவரும் காலங்களில் பிக்குகள் தொடர்பாக உரிய நிகாய அல்லது பிரிவின் பரிந்துரையின் பேரில் காவி ஆடையுடன் வெளியே அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 இறுதி காலாண்டில் மின் கட்டணத்தில்...

2026-11-11 17:41:14
news-image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச்...

2026-11-11 22:41:08
news-image

காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை...

2026-11-11 22:31:13
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி...

2026-11-11 17:27:27
news-image

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் மெட்ரோ...

2026-11-11 17:23:45
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு -...

2026-11-11 18:21:49
news-image

சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா...

2026-11-11 21:12:02
news-image

சஜித் பிரேமதாச விநியோகித்த பேருந்துகளுக்கு முறையாகச்...

2026-11-11 13:22:17
news-image

பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளை முடக்கும்...

2026-11-11 17:51:02
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தை நலன்புரி...

2026-11-11 20:54:31
news-image

விசுவமடு மகாவித்தியால மைதானத்திற்கான சுற்றுவேலியை அமைத்துக்கொடுத்த...

2026-11-11 20:50:59
news-image

மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ...

2026-11-11 18:22:24