இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இலங்கைக் கடற்பரப்புக்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்து வருவதனால் வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். வடக்கு மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியாமல் தொடர்ந்தும் திண்டாடுகின்றனர்.
மூன்று தசாப்தகால யுத்தம் காரணமாக வடக்கில் கடற்றொழில் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது. இலங்கை கடற்பரப்பில் அதிபாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு அந்தப் பகுதிகளுக்குள் மீன் பிடிக்கச் செல்ல முடியாத நிலைமை அன்று நீடித்து வந்தது.
அந்தக் காலப் பகுதியிலும் இலங்கைக் கடற்பரப்புக்குள் ஊடுருவி, இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போதும் தமிழக மீனவர்களின் அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.
ரோலர் படகுகளை பயன்படுத்தி தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடிப்பதனால் இலங்கையின் மீன் வளம் அழிவடையும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இதனால் வடக்கு மீனவர்களின் வாழ்வதாரம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றது.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இலங்கைக் கடற்படையினரால் பல்வேறு தடவைகள் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது.
கடந்த வாரமும் வடபகுதி கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு அத்துமீறும் மீனவர்களில் ஒரு பகுதியினர் கைது செய்யப்படுவதும் பின்னர் விடுவிக்கப்படுவதும் தொடர்கதையாக மாறி இருக்கின்றது.
இந்த அத்துமீறல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் இரு நாடுகளுக்கு இடையிலான மீனவ சங்கங்கள் மத்தியில் பேச்சுகள் இடம்பெற்ற போதிலும் பிரச்சினைக்குத் தீர்வுகள் காணப்படவில்லை.
அதேபோன்று இரு நாட்டு மத்திய அரசாங்கங்களும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி, மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரப்படுகின்ற போதிலும் அந்த விடயத்திலும் ஒரு சாதகமான சூழல் ஏற்பட்டதாக தெரியவில்லை.
இலங்கைக் கடற்பரப்புக்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறும் போது கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர், மத்திய அரசாங்கத்தை கோரும் செயற்பாடு அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் மீனவர்களின் விடுதலையைக் கோரி இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தொடர்ச்சியாக கடிதங்களை எழுதி வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.
பல்லாண்டு காலமாக தொடரும் இந்த மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமானால் இரு தரப்புகளுக்கிடையிலும் புரிந்துணர்வு ஏற்பட வேண்டியது அவசியமாக உள்ளது.
இதேபோன்றே தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போது தமிழக அரசியல் தலைவர்கள் கச்சதீவை இலங்கையிடமிருந்து மீளப் பெறவேண்டும் என்று கோஷம் எழுப்புவது வழமையான நடைமுறையாக மாறியிருக்கின்றது.
தமிழகத்தில் தேர்தல் இடம்பெறும் போது கச்சதீவு விவகாரம் ஒவ்வொரு முறையும் சூடுபிடிப்பதை காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு கச்சதீவு விவகாரமும் மீனவர் பிரச்சினையும் தொடர் கதையாக மாறியிருக்கும் வேளையில் இந்திய உச்சநீதிமன்றமானது வழங்கிய அறிவுறுத்தல் தற்போது முக்கியத்துவம் பெறுகின்றது.
இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவு விவகாரத்தில் அந்நாட்டின் கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் செல்லாமல் இருப்பதற்கு அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கச்சதீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரும் பொதுநல மனு மீதான விசாரணையின் போதே இவ்வாறு இந்திய உச்ச நீதிமன்றத்தினால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த வழக்கு விசாரணையின் போது, ‘கச்சதீவு விவகாரத்துக்குள் செல்வதற்கு நாம் விரும்பவில்லை. ஆரம்பத்தில் அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அது ஒரு கட்டத்தில் கைவிடப்பட்டது. இலங்கையுடன் இந்தியாவுக்கு மிகச் சிறந்த உறவு உள்ளமையினால் அதை கெடுத்துக் கொள்ள அரசாங்கம் விரும்பவில்லை’ என்று மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
‘தமிழகக் கடற்பகுதியில் மீன்களின் இருப்பு பெருமளவில் குறைந்து விட்டது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்கு செல்கின்றனர். இலங்கையின் கடல் எல்லைக்குள் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது. ஆனாலும் தமிழக மீனவர்கள் அங்கு செல்கின்றனர். இலங்கை கடல் எல்லைக்குள் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றால் கைது செய்யப்படுவார்கள். எமது கடலை நாம் மாசுபடுத்துகிறோம். இலங்கை மீனவர்கள் இங்கு வருவதில்லை’ என்றும் இந்திய மத்திய அரசாங்கத்தின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
இதனைவிட, எல்லை தாண்டும் மீனவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதனால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு என்றும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மத்திய அரசின் இந்த கருத்துகளை, தமிழக அரசின் சார்பில் வழக்கின் போது ஆஜரான சட்டத்தரணி மறுத்துரைத்திருக்கின்றார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த பின்னரே, இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் செல்லாமல் இருப்பதற்கான விழிப்புணர்வை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த வழக்கில், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்து வருவதை இந்திய மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அவ்வாறு அத்துமீறி மீன் பிடிப்பது தவறு என்பதையும் உணர்ந்து கொண்டிருக்கின்றது.
கச்சதீவு விவகாரம் குறித்து பேசி, இலங்கையுடனான உறவை முறித்துக் கொள்வதற்கு இந்திய மத்திய அரசு விரும்பவில்லை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது.
ஆனாலும், தமிழக அரசாங்கமானது தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை நியாயப்படுத்துவதற்கு முனைந்துள்ளதாகவே தெரிகின்றது.
உண்மையிலேயே இந்திய மீனவர்களின் அத்துமீறல்களினால் வடக்கின் மீன்வளம் முற்றாக சூறையாடப்பட்டு வருகின்றது. இதனால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கைத் தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகளாக வர்ணிக்கப்படும் தமிழக மக்கள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தமது அரசியல் நலன்களை மட்டும் கருத்தில்கொண்டு செயற்படுவதாகவே தெரிகின்றது.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களை கருத்தில் கொண்டு தமிழக மீனவர்களின் ஊடுருவலை தடுக்கும் வகையிலான செயற்பாடுகள் இனியாவது மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு தமிழக அரசாங்கமும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகவுள்ளது.
உண்மையிலேயே இலங்கை–இந்திய மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமானால் இரு தரப்பு மீனவர் சங்கங்களுக்கிடையே கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் இவ்வாறு மீனவ அமைப்புகளிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. ஆனாலும், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் செயற்பாட்டை தமிழக மீனவர் சங்கங்கள் தமது உரிமை என்ற அடிப்படையில் பேச முனைவது ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடு அல்ல.
இலங்கையின் கடற்பரப்புக்குள் ஊடுருவி மீன்பிடித்துக் கொண்டு, கச்சதீவு விவகாரத்தை சர்ச்சையாக்கிக் கொண்டு தொடர்ந்தும் செயற்படுவதால் தீர்வை காண முடியாது.
எனவே, இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கமும் இந்திய மத்திய அரசாங்கமும் பேச்சுகளை நடத்தி, அறுதியானதும் உறுதியானதுமான முடிவினை எடுக்க வேண்டும்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்பட்டால் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியும். இந்திய மத்திய அரசாங்கம், இந்த விடயத்தில் யதார்த்த நிலையை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இதயசுத்தியுடன் மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தமிழக அரசாங்கமும் ஒத்துழைக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM