மனித உரிமைகள், நீதியை நிலைநாட்டுவதற்கான 'நவி' பிள்ளையின் வாழ்நாள் பணிக்கு உயரிய அங்கீகாரம் - அனைத்துலகத் தமிழர் பேரவை வாழ்த்து

Published By: Digital Desk 1

11 Oct, 2026 | 12:25 PM
image

(நா.தனுஜா)

மனித உரிமைகள், நீதி மற்றம் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக கலாநிதி நவநீதம் 'நவி' பிள்ளை ஆற்றிவரும் வாழ்நாள் பணிக்கான மிக உயரிய அங்கீகாரமாக அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அமைந்திருப்பதாக அனைத்துலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இவ்வாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவந்த, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் நவநீதம் 'நவி' பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து கனடாவை தளமாக்கொண்டு இயங்கிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்பான அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் நிமல் விநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

தென்னாபிரிக்காவின் தமிழ் வம்சாவளிக் குடும்பமொன்றின் வாரிசான நவநீதம் பிள்ளைக்கு 2026 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளமை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பெருமையளிக்கும் விடயம் என்பதுடன், அவருக்கு எமது வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மனித உரிமைகள், நீதி மற்றம் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக அவர் ஆற்றிவரும் வாழ்நாள் பணிக்கான மிக உயரிய அங்கீகாரமாக இந்த நோபல் பரிசு அமைந்திருக்கிறது.

தென்னாபிரிக்காவில் தமிழ் வம்சாவளிக் குடும்பத்தில் பிறந்த நவநீதம் பிள்ளை, நிறவெறி ஆட்சியின் அநீதிகளை எதிர்கொண்டு, சர்வதேச மட்டத்திலான தலைமைத்துவத்துக்கு உயர்ந்தமை உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமிதத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. அவரது சாதனைகள் அவரது தமிழ் பூர்விகத்தின் வலிமையையும் புலம்பெயர்ந்தோரின் அடுத்த தலைமுறைகள் தாம் வாழும் நாடுகளுக்கும் மனிதகுலத்துக்கும் ஆற்றக்கூடிய மகத்தான பங்களிப்பையும் காண்பிக்கின்றன.

நவநீதம் பிள்ளை 2008 - 2014 வரையான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராகப் பணியாற்றினார்.

கல்வி, சம வாய்ப்புக்கள், சமூகப்பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்தின் ஊடாகப் புலம்பெயர்ந்த மக்களையும் சமூகங்களையும் வலுப்படுத்தவேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த அங்கீகாரம் அடிக்கோடிட்டுக் காண்பிக்கின்றது. இளைஞர்கள், பெண்கள் மற்றும் நலிவுற்ற சமூகங்கள் தடைகளைக் கடந்து, தமது முழுத்திறனையும் வெளிப்படுத்துவதற்கு உறுதுணையாகச் செயற்பட அவரது வாழ்க்கைப் பயணம் எம்மை ஊக்குவிக்கின்றது.

நவநீதம் பிள்ளையின் இந்தச் சாதனையை நாம் மிகுந்த மரியாதையுடனும் நன்றியுணர்வுடனும் கொண்டாடுகின்றோம். மனித கண்ணியத்தைப் பாதுகாக்கவும், பாகுபாடுகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கவும், நீதியும் அமைதியும் நிறைந்த உலகைக் கட்டியெழுப்பவும் அவரது துணிவும் அர்ப்பணிப்பும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டட்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அர்ஜென்டினாவில் எரிவாயுக் குழாய் வெடிப்பு –...

2026-11-14 15:25:39
news-image

சீனாவின் ஷென்செனில் 33ஆவது ஏபெக் பொருளாதாரத்...

2026-11-14 14:02:56
news-image

முடங்கிய அமெரிக்க விமானச் சேவைகள் மீண்டும்...

2026-11-14 13:22:01
news-image

ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் 15ஆவது சோதனைப்...

2026-11-14 14:02:33
news-image

அமெரிக்காவில் பயணிகள் கப்பல் மீது சரக்குக்...

2026-11-14 11:19:34
news-image

மைக்ரோசொப்ட் தொழில்நுட்ப கோளாறு: இந்தியாவில் விமான...

2026-11-13 17:44:11
news-image

உலகளாவிய மைக்ரோசொப்ட் சேவைத் தடை 12...

2026-11-13 14:54:03
news-image

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு...

2026-11-13 14:41:00
news-image

நேபாளத்தில் மின்சார பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து...

2026-11-13 10:54:05
news-image

மைக்ரோசொப்ட் சேவைகளில் உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறு!...

2026-11-13 09:53:18
news-image

அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. நகரில் துப்பாக்கிச்...

2026-11-13 10:07:21
news-image

ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைரா நகரில்...

2026-11-13 10:20:17