iPhone 18 Pro, Pro Max பாகங்களின் உற்பத்தியைக் குறைக்க ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தல்!

Published By: M.Priyanka

10 Oct, 2026 | 12:46 PM
image

அண்மையில்  சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஐ போன் 18 புரோ (iPhone 18 Pro) மற்றும் ஐபோன் 18 புரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) ஆகிய மாடல்களுக்கான பாகங்களின் உற்பத்தியைக் குறைக்குமாறு ஆப்பிள் நிறுவனம் தனது சில விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக 'நிக்கே ஆசியா' செய்தி வெளியிட்டுள்ளது.

நினைவகச் சில்லுகளின் (Memory Chips) கடும் விலை உயர்வு மற்றும் கைப்பேசிகளின் விலை அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் மத்தியில் விற்பனை தேவை குறைந்துள்ளதே இந்நடவடிக்கைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்றுமதி குறித்த முடிவுகளில் ஆப்பிள் நிறுவனம் மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. 

இதற்கமைய, ஒக்டோபர் மாதத்திற்காக ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட பாகங்களின் ஆர்டர்களில் குறைந்தது 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது என்று இத்துறை சார்ந்த தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி நிக்கே செய்தி வெளியிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களின் வளர்ச்சி காரணமாக முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்கள் மேம்பட்ட சில்லுகளையும் நினைவகச் சில்லுகளையும் பெருமளவில் கொள்முதல் செய்து வருகின்றன. 

இதனால் சந்தையில் சில்லுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது. இது நடப்பாண்டில் தனிநபர் கணினி மற்றும் ஸ்மார்ட்போன் சந்தைகளின் வளர்ச்சியைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, AI தொழில்முறைத் தேவைகளால் ஏற்பட்ட நினைவகச் சில்லுகளின் விலை உயர்வை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தாமல் தவிர்க்க முடியாது எனக் கூறி, கடந்த ஜூன் மாதம் தனது ஐபேட் மற்றும் மேக்புக் சாதனங்களின் விலைகளை ஆப்பிள் நிறுவனம் உயர்த்தியிருந்தது.

கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தலைமுறை ஸ்மார்ட்போன்களான ஐபோன் 18 புரோ மற்றும் 18 புரோ மேக்ஸ் மாடல்களுடன் தனது முதலாவது மடிப்புப் போன் 'டியூ'  மாடலையும் அறிமுகப்படுத்தியது. 

ஐபோன் 18 புரோ மாடலின் ஆரம்ப விலை $1,199 ஆகவும், புரோ மேக்ஸ் மாடலின் ஆரம்ப விலை $1,299 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஐபோன் 17 புரோ வரிசையை விட 100 டொலர்கள் கூடுதலாகும்.

ஐபோன்கள் மற்றும் பிற சாதனங்களில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் அதிகரிக்கப்பட்டு வருவதால், உயர் திறன் கொண்ட நினைவகச் சில்லுகளுக்கான தேவை ஆப்பிள் நிறுவனத்திற்கு அதிகரித்துள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சில்லுகளுக்கான தட்டுப்பாட்டுக்கு மத்தியில், விநியோகஸ்தர்களின் பங்கு மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்