அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தன் மீது பாலியல் சேட்டை புரிந்ததாக பிரபல தொலைக்காட்சி நடிகை ஹீதர் லிண்ட் (34) புகார் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நாடகம் ஒன்றின் விளம்பரப் பணிகளுக்காக லிண்ட் தனது குழுவினருடன் 2013ஆம் ஆண்டு ஜோர்ஜ் புஷ்ஷை (93) சந்தித்தார். அப்போது புகைப்படம் பிடிப்பதற்காக அனைவரும் ஒன்று கூடிய வேளையில், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த புஷ், லிண்டின் கையைப் பிடிப்பதற்குப் பதிலாக, அவரது பின்புறத்தை இறுக்கிப் பிடித்ததாகவும், ஒரு மூன்றாம் தர நகைச்சுவை ஒன்றையும் கூறித் தன்னை முகம் சுளிக்கச் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதுமட்டுமன்றி, இரண்டாம் முறை மீண்டும் புஷ் அதே காரியத்தைச் செய்ததாகவும், அப்போது அங்கே நின்றிருந்த புஷ்ஷின் மனைவி பார்பரா, “மீண்டும் அப்படிச் செய்ய வேண்டாம்” என்பதாக சாடை காட்டியதாகவும் லிண்ட் குறிப்பிட்டுள்ளார்.

இக்குற்றச்சாட்டுக்கு புஷ்ஷின் சார்பில் உடனடியாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், தாம் எப்போதும் யாரையும் வேண்டுமென்றே மன அழுத்தத்துக்குள்ளாக்கவில்லை என்றும், அவரது செயலும் நகைச்சுவையும் லிண்டை மனம் வருந்தச் செய்திருந்தால் அதற்கு மன்னிப்புக் கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுத் தவிரவும், மேற்படி சந்திப்பின்போது அனைவரும் புஷ்ஷை ‘ஜனாதிபதி’ என்றே குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கும் லிண்ட், புஷ் பதவி விலகிய பின்னும் அவரை ஜனாதிபதி என மக்கள் அழைக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, அமெரிக்காவின் ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.