இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஐம்பது ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கட்களை இழந்த நியூஸிலாந்து அணி மொத்தமாக 230 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது போட்டியில் நியூஸிலாந்து வெற்றிபெற்ற நிலையில், இன்று புனேயில் இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது.

பகலிரவு ஆட்டமாக ஆடப்படும் இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி துடுப்பாடத் தீர்மானித்தது. எனினும், சீரான இடைவெளியில் விக்கட்களை இழந்த அவ்வணி, ஐம்பது ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கட்களை இழந்து 230 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

நியூஸிலாந்து சார்பில் ஹென்றி நிக்கலஸ், கொலின் டி கிராண்டோம் ஆகிய பின்வரிசை ஆட்டக்காரர்கள் முறையே 42 மற்றும் 41 ஓட்டங்களைப் பெற்றனர். ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் புவனேஷ்குமார் அபாரமாகப் பந்துவீசி மூன்று விக்கட்களை வீழ்த்தினார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா இரண்டு விக்கட்களைப் பறித்தனர்.

தற்போது இந்திய அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ளது.