கெக்கிராவையில், கர்ப்பம் என்று கூறி பாடசாலையை விட்டு மாணவி ஒருவர் நீக்கப்பட்ட சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து ஆராய ஏற்கனவே ஒரு பொலிஸ் குழு அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கும் அதிகாரசபை, மற்றொரு சிறப்பு பொலிஸ் விசாரணைக் குழுவொன்றும் அனுப்பப்படவுள்ளாகத் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கெக்கிராவை, மதட்டுகமவில் உள்ள பாடசாலை ஒன்றில், வறிய குடும்பத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியொருவர் வாந்தியெடுத்திருக்கிறார்.

இதையடுத்து, ஆசிரியர்களும் பாடசாலை அதிபரும் குறித்த மாணவியிடம் அவர் கர்ப்பம் தரித்துள்ளாரா? அதற்கான சம்பவம் ஏதும் இடம்பெற்றதா என்றெல்லாம் தகாத வார்த்தைகளால் துளைத்தெடுத்துள்ளனர். இந்தக் கேள்விகளைச் செவியுற்ற அந்த மாணவி கண்ணீர் விட்டுக் கதறியழுதிருக்கிறார்.

அத்துடன் நில்லாது, குறித்த மாணவியின் பெற்றோர் பாடசாலைக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களது மகள் கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் அவரை பாடசாலையை விட்டு விலக்குவதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியுற்ற பெற்றோர், தம் மகளை கெக்கிராவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், மாணவி காலை ஆகாரம் உண்ணாமல் பாடசாலை வந்ததாலேயே வாந்தியெடுத்தது தெரியவந்துள்ளது.

நடந்ததை பெற்றோர் மூலம் அறிந்துகொண்ட சட்ட வைத்திய அதிகாரி, குறித்த பாடசாலை அதிபர் உள்ளிட்டோர் மீது சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடொன்றைச் செய்தார். இதையடுத்தே இவ்விவகாரம் வெளியே கசிந்தது.