சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி குறித்த இறுதித் தீர்மானத்துக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில், ‘முடிவு எப்படியானதாக இருந்தாலும் அது சைட்டம் மருத்துவக் கல்லூரியைக் கைவிடும் வகையில் ஒரு தீர்வாக இருக்காது’ என்று உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இதேவேளை, புதிய மருத்துவக் கல்லூரி ஒன்றை உருவாக்குவதற்குத் தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்து நிர்ணயம் செய்வதற்காக இலங்கை மருத்துவச் சபையின் விசேட கூட்டம் ஒன்று இன்று நடைபெறுகிறது என மேற்படி சபையின் பதிவாளர் டொக்டர் டெரன்ஸ் காமினி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற கலந்துரையாடல் குறித்து இலங்கை மருத்துவச் சபையின் தலைவர் பேராசிரியர் கொல்வின் குணரத்ன விளக்கமளிக்கவுள்ளார்.

மருத்துவக் கல்வி வழங்குவதற்குத் தேவையான அடிப்படைத் தராதரங்கள் குறித்து கடந்த பதினேழாம் திகதி இலங்கை மருத்துவச் சபையின் குழுவினர் சட்ட மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர்.

இதன்போது, சட்ட மா அதிபர் வழங்கியிருந்த சில சிபாரிசுகளை மருத்துவச் சபை ஏற்றுக்கொண்டிருந்தது. இன்று நடைபெறும் சந்திப்பு இதன் தொடர்ச்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.