பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

Published By: Digital Desk 2

08 Oct, 2026 | 12:49 PM
image

இந்தியாவின் பிரபல நட்சத்திர நடிகரான நானா படேகர் (75) உடல்நல குறைவு காரணமாக இன்று (08) வியாழக்கிழமை காலையில் காலமானார்.

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான 'பொம்மலாட்டம்' திரைப்படத்தின் மூலமாக தமிழ் இரசிகர்களுக்கு அறிமுகமானவரும், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'காலா' திரைப்படத்தின் மூலம் பிரபலமானவருமான பொலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நல குறைவு காரணமாக இன்றைய தினம் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவாவில் உள்ள அவரது வீட்டில் சுய நினைவை இழந்து மயங்கி கிடந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்ட நடிகர் நானா படேகரை உடனடியாக வைத்திய சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும்... வைத்தியசாலைக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே அவர் மாரடைப்பின் காரணமாக இறந்து விட்டதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தி மற்றும் மராத்திய திரை உலகில் தனக்கென பிரத்யேக அடையாளத்தை பதித்து நிகரற்ற நடிகராக வலம் வந்த நானா படேகர் - இந்தி, மராத்திய சினிமாவை கடந்து தமிழ்- ஆங்கிலம்- கன்னடம் -ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

தனியார் வைத்திய சாலையின் வைத்தியர் சேகர் சல்கர், நானா படேகருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து குறிப்பிடுகையில்.., 

'' மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்ட நானா படேகருக்கு தொடர்ந்து 45 நிமிடங்கள் வரை உயிர் காக்கும் சி பி ஆர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும்.. அவரை காப்பாற்ற இயலவில்லை. சிகிச்சைக்கு அவருடைய உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் இன்று காலை 5 20 மணியளவில் அவர் உயிரிழந்தார்'' என தெரிவித்துள்ளார்.

நானா படேகர் 1978 ஆம் ஆண்டு 'கமன்'  திரைப்படத்தின் மூலம் இந்தியில் நடிகராக அறிமுகமானார். 2008 ஆம் ஆண்டில் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'பொம்மலாட்டம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'காலா' திரைப்படத்தில் ஹரிதேவ் அபயங்கர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவர் சின்னத்திரையிலும் நடித்திருக்கிறார். கலைத்துறையில் சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக 2013 ஆம் ஆண்டில் இந்திய அரசின் தேசிய விருதான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நானா படேகரின் திடீர் மறைவு இந்தி மற்றும் மராத்திய திரையுலகினரிடத்தில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு ரசிகர்களும், இந்திய திரையுலகினரும் சமூக ஊடகங்கள் வழியாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லியோ சிவக்குமார் நடிக்கும் 'டெலிவரி பாய்'...

2026-11-14 17:17:12
news-image

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் 'செங்குலம்'...

2026-11-14 17:17:02
news-image

நஸ்லென் நடிக்கும் 'பேச்சுலர் பார்ட்டி டீயெக்ஸ்'...

2026-11-14 17:16:07
news-image

தனுஷ்- மம்முட்டி நடிக்கும் 'ஓம்' படத்தின்...

2026-11-14 17:15:00
news-image

நடிகர் எஸ். பி. சித்தார்த் நடிக்கும்...

2026-11-14 16:29:30
news-image

கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் டி...

2026-11-14 16:27:22
news-image

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'ஸ்டேஷன்'...

2026-11-14 16:27:09
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் காளிதாஸ் ஜெயராமின்...

2026-11-14 16:27:00
news-image

புதுமணத் தம்பதிகளான அனிருத் – காவியா...

2026-11-14 16:08:41
news-image

டைட்டானிக் ( காதலும் கவுந்து போகும்)...

2026-11-14 15:49:20
news-image

பிளாக் - Flag - திரைப்பட...

2026-11-14 15:41:56
news-image

ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை...

2026-11-13 15:28:17