பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றார்.

ஸ்பெயினின் தலைசிறந்த கால்பந்து கழகமான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார் ரொனால்டோ. 

இவ்வருடம் லா லிகா, ஸ்பெயின் சூப்பர் கிண்ணம், ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணம் ஆகியவற்றை ரியல் மாட்ரிட் அணி கைப்பற்றுவதற்கு ரொனால்டோவின் ஆட்டமே முக்கிய காரணம்.

இந்த வருடத்திற்கான பிபாவின் சிறந்த வீரரருக்கான விருது நேற்றுமுன்தினம் (23) அறிவிக்கப்பட்டது. இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி, நெய்மர் ஆகியோருக்கிடையில் கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் ரொனால்டோ சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார்.

மெஸ்சி 2ஆவது இடத்தையும், நெய்மர் 3ஆவது இடத்தையும் தட்டிச்சென்றனர். கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த விருதை ஐந்தாவது முறையாக பெற்றுள்ளதுடன் ஐந்து முறை விருது வென்ற மெஸ்சியின் சாதனையை சமன் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.