தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கிரேட்வெஸ்டன் மலைத்தோட்ட மக்கள்  இன்று பகல் முதல் சடலம் ஒன்றை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த மலைத்தோட்டத்தில் வசித்து வந்த 40 வயதுடைய ஆர்.லெட்சுமன் கடந்த 22 ஆம் திகதி கிரெட்வெஸ்டன் பகுதியில் ரயில் பாதையில் சென்ற பொழுது கால் இடறி விழுந்துள்ளார்.

உடனடியாக இவரை பொது மக்கள் பலர் தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தோட்ட வைத்திய அதிகாரி உரிய நேரத்தில் வருகை தந்து சிகிச்சையை மேற்கொள்ளாமையினால் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை தோட்டத்தில் அம்புலன்ஸ் வண்டி இருந்தும் இவரை மேலதிக சிகிச்சைக்காக உரிய நேரத்தில் கொண்டு செல்லாமையினாலும் குறித்த நபர்  உயிரிழந்திருப்பதாக தோட்ட நிர்வாகத்தை கண்டித்து  மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 500ற்கும் மேற்பட்டோர் தோட்ட நிர்வாகத்திற்கும், தோட்ட வைத்தியருக்கும் எதிரான கோஷங்களை எழுப்பினர்.

தோட்ட வைத்திய சேவையின் அசமந்த போக்கினாலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்  எனவும் உரிய நேரத்தில் சிகிச்சையை மேற்கொண்டிருந்தால் இவரை நம்பியிருக்கும் குடும்பத்தினர் நடுதெருவுக்கு வந்திருக்க மாட்டார்கள் என ஆதங்கத்தை வெளிப்படுத்திய தோட்ட மக்கள் உடனடியாக அரசியல்வாதிகள், சுகாதார அமைச்சு என சம்மந்தப்பட்டவர்கள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற செய்தியை முன்வைத்த பின்பே சடலம் அடக்கம் செய்யப்பட்டது.