(லியோ நிரோஷ தர்ஷன்)
இலங்கை பொருளாதார மீட்சியை எதிர்நோக்கியுள்ள போதிலும், அந்நாட்டின் வெளிநாட்டு நேரடி முதலீட்டுச் சூழல் இன்றும், பெரும் சவால்கள் நிறைந்ததாகவே காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள இலங்கையின் 2026 முதலீட்டுச் சூழல் பற்றிய அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டு நேரடி முதலீடு 1.06 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமேயாகும். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1 சதவீதமாகும். வளர்ந்து வரும் ஏனைய பொருளாதார நாடுகளில் இத்தொகை 3 முதல் 4 சதவீதம் வரை காணப்படும் நிலையில், இலங்கையின் முதலீட்டுப் பெறுமதி கணிசமாகக் குறைந்த மட்டத்திலேயே உள்ளதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அதேவேளை, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் தேசிய மக்கள் சக்தி பெற்ற தேர்தல் வெற்றிகளைத் தொடர்ந்து அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதாகவும், 2025 இல் எதிர்பார்க்கப்பட்டதை விட 5 சதவீத பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், சந்தைத் திறப்பு தொடர்பான தெளிவற்ற கருத்துக்கள், கொள்கைகளில் காணப்படும் நிலையற்ற தன்மை மற்றும் ஒழுங்குமுறை கணிப்புகளின்மை காரணமாகப் பல முதலீட்டாளர்கள் இன்னமும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
2023–2027 காலப்பகுதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் 3 பில்லியன் டொலர் நீடிக்கப்பட்ட நிதியமைவுத் திட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அளித்துள்ள அர்ப்பணிப்பு முதலீட்டாளர்களுக்குச் சற்று நம்பிக்கையளித்துள்ளது.
எனினும் கொள்கை ஸ்திரத்தன்மை, ஒழுங்குமுறை மறுசீரமைப்புகள், நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறைக்கான காணிகளைப் பெறுதல் ஆகிய துறைகளில் இலங்கை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முதலீட்டு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் திட்டங்கள் திடீரெனக் கைவிடப்படுதல், தாமதமான தீர்மானங்கள் மற்றும் போதிய அரசாங்க ஆதரவின்மை குறித்து முதலீட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியமும் உள்ளூர் வர்த்தகச் சங்கங்களும் வர்த்தக வசதிகளை மேம்படுத்தல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட கட்டமைப்பு மறுசீரமைப்புகளை வலியுறுத்தியுள்ளன.
அண்மைய காலத்தில் பல பிரதான முதலீட்டுத் திட்டங்கள் தாமதமடைந்துள்ளமையை அல்லது மாற்றமடைந்துள்ளமையை அமெரிக்க அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகே 3.7 பில்லியன் டொலர் செலவில் சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு 2025 ஜனவரியில் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். எனினும், அரசாங்கத்திற்கும் குறித்த சீன நிறுவனத்திற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் காரணமாக 2026 ஜூன் வரையிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
வடக்கில் 400 மில்லியன் டொலர் செலவிலான 484 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்திலிருந்து இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 2025 பெப்ரவரியில் விலகியது. ஏற்கனவே வழங்கப்பட்ட ஒப்பந்த நிபந்தனைகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய முயன்றதே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2025 டிசம்பரில் சைனா ஹாபர் எஞ்சினியரிங் நிறுவனத்துடன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் கையெழுத்தாகச் சில நாட்களே இருந்த நிலையில் அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது.
இலங்கை முதலீட்டுச் சபை, முதலீட்டாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் அனைத்துச் சேவைகளையும் வழங்கும் நிறுவனமாகச் செயல்படத் தவறியுள்ளது. பல அரசாங்க முகவர் நிறுவனங்களின் அனுமதிகளைப் பெறுவதில் தொடர்ந்தும் தாமதங்கள் நிலவுகின்றன. இலங்கை மின்சார சபை போன்ற அரச நிறுவனங்களின் திறனின்மையும் முதலீட்டைப் பாதிக்கும் காரணியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கடுமையான தொழிலாளர் சட்டங்கள் காரணமாக ஊழியர்களைக் குறைப்பது கடினமாகவும் செலவுமிக்கதாகவும் உள்ளது. 2022 ஆம் ஆண் நெருக்கடிக்குப் பிறகு திறமையான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதால், ஆடைத் துறை உள்ளிட்ட துறைகளில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆடைத் துறையில் ஊழியர்கள் விலகும் வீதம் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
அத்துடன், வெளிநாட்டு உரிமையாளர் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள நிறுவனங்களுக்கு காணிகளை விற்பனை செய்ய உள்ள சட்டத் தடைகளும் முதலீட்டாளர்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளன.
எனவே பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வருவதில் முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு அதன் கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை பலவீனங்களை நிவர்த்தி செய்வது மிகவும் அவசியமாகும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM