(லியோ நிரோஷ தர்ஷன்)
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அநுர குமார திசாநாயக்கவுக்கு சாதகமாக சர்வதேச அபிப்பிராயத்தை வடிவமைப்பதில் மிக முக்கிய பங்கு வகித்தது ஜே.வி.பி குழுவினரின் இந்திய விஜயமாகும். 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான காலம் முதல் தீவிர இந்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து வந்த ஜே.வி.பி, அண்மைக்காலம் வரை அந்த நிலைப்பாட்டையே தொடர்ந்தது.
இருப்பினும், ஜனாதிபதித் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு அநுர குமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட தீர்மானமிக்க இந்திய விஜயத்துடன் ஜே.வி.பியின் இந்திய எதிர்ப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அநுரவின் வெற்றியின் பின்னணியில் இந்தியாவின் இந்த ஆதரவு சமிக்ஞை முக்கிய காரணியாக அமைந்தது.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு புதிய அரசாங்கம் இந்தியாவுடன் மிக நெருக்கமாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், ஆரம்பக் கட்டத்தில் அது வெளிப்படையாகத் தெரியவில்லை. இதனால், ஜே.வி.பி வழக்கம்போல தனக்குச் சாதகமான இடதுசாரி கொள்கையைக் கொண்ட சீனாவுடன் நெருக்கம் காட்டும் எனக் கருதப்பட்டது. கடந்த சில மாதங்களாக சீனாவுக்கும் ஜே.வி.பிக்கும் இடையே சுமுகமான உறவு நிலவவில்லை.
இதற்கு மத்தியில்தான், சில மாதங்களுக்கு முன்பு ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா சீனாவுக்கு விஜயம் செய்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலும், இரு நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையிலும் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அவர் பல ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
சீனாவுடனான உறவுகள் இவ்வாறிருக்க, கடந்த வாரம் டில்வின் சில்வா திடீரென இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரில் இப் பயணம் அமைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக, பாரதிய ஜனதா கட்சி இந்துத்துவா கொள்கையை மையமாகக் கொண்ட ஒரு கட்சியாகப் பார்க்கப்படுகிறது. மறுபுறம், ஜே.வி.பி கடந்த காலத்தில் சிங்கள பௌத்த தேசியவாதத்திற்கு முன்னுரிமை அளித்த போதிலும், தற்போது தீவிர இனவாத நிராகரிப்பு மற்றும் சிறுபான்மை உரிமைகளை மதிக்கும் கட்சியாகத் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது.
கொள்கை ரீதியாக இவ்விரு கட்சிகளும் முற்றிலும் மாறுபட்ட துருவங்களில் உள்ள நிலையில், ஜே.வி.பிக்கும் பி.ஜே.பிக்கும் இடையே எந்த அடிப்படையில் உடன்பாடு எட்டப்பட முடியும் என்ற கேள்வி எழுகிறது.
டில்வின் சில்வாவின் இந்திய விஜயத்தில் மிகவும் முக்கியத்துவமிக்க சந்திப்பாக அமைந்தது பி.ஜே.பியின் தேசியப் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் உடனான பேச்சுவார்த்தையாகும். பி.எல். சந்தோஷ் பி.ஜே.பியின் பின்னால் இயங்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கியப் பிரதிநிதியாவார். பி.ஜே.பியின் கொள்கை மூலமாக அல்லது தீவிரப் பிரிவாக இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தச் சந்திப்பின் போது, பி.ஜே.பி எவ்வாறு கட்டியெழுப்பப்பட்டது? அதன் அடிமட்ட அமைப்புக் கட்டமைப்பு மற்றும் கட்சி இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது? உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் முறைகள் என்ன? தேசிய அல்லது கட்சி ரீதியான அவசர நிலைகளின் போது கட்சி எவ்வாறு செயற்படுகிறது? என்பது தொடர்பான விபரங்களை பி.ஜே.பி தலைவர்களிடம் டில்வின் சில்வா கேட்டறிந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு தீவிர வலதுசாரி சித்தாந்தக் கட்டமைப்பாகும். ஆனால் ஜே.வி.பியோ கடந்த காலத்தில் இரு ஆயுதக் கிளர்ச்சிகளை முன்னெடுத்த இடதுசாரி அமைப்பாகும்.
இவ்வளவு காலமும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமான உறவைப் பேணி வந்த ஜே.வி.பி, திடீரென இந்தியாவின் பி.ஜே.பி மற்றும் அதன் துணை அமைப்புகளை ஆய்வு செய்ய இந்தியாவிற்கு விஜயம் செய்தமை, கட்சி தனது சித்தாந்த நிலைப்பாட்டில் ஒரு தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிடுகிறதா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. பி.ஜே.பியின் தேர்தல் பிரச்சார மற்றும் அமைப்புக் கட்டமைப்பை ஜே.வி.பி இலங்கையில் அமல்படுத்த முயற்சிக்கிறதா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM