(க.சிவலிங்கமூர்த்தி)
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி மீது கமராவினால் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், பெலவத்தையிடம் இருந்தோ திசைகாட்டி அரசாங்கத்திடம் இருந்தோ வரும் உத்தரவுகளுக்கு அமைவாக அல்லாமல், சட்டத்துக்கு அமைய சுயாதீனமாக பொலிஸ் மா அதிபர் செயற்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் எட்டாவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை பொலிஸ் மா அதிபர் நீதியின் கண்கொண்டு பார்க்கின்றாரா அல்லது திசைகாட்டி அரசாங்கத்தின் அதிகாரத்தையும் பெலவத்தையிலிருந்து விதைக்கப்படும் வெறுப்பையும் கொண்டு பார்க்கின்றாரா என்பதை நாம் கேட்கின்றோம்.
கமராவினால் அதிகாரியைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரை காலையில் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்திருந்த நிலையில், அவர் 11 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்கு சென்றதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. பொலிஸாரின் அழைப்பை ஒருவர் இவ்வாறு இலகுவாக எடுத்துக்கொள்வதற்கு பெலவத்தையின் அதிகார பலம் காரணமா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.
கடந்த காலத்தில் சிந்த விஜேசிறி பொலிஸ் அதிகாரி ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்பட்ட சம்பவத்தை அரசாங்கம் பெரிய விடயமாக எடுத்துக்கொண்டது. ஆனால் பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட இந்தச் சம்பவத்தை ஏன் கருதவில்லை? பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் வட்டகல இதனை சிறிய சம்பவமாகக் கருதுவதாக கூறியிருப்பது ஏன்?
கடந்த 76 வருடங்களின் சாபம் எனக் கூறி மக்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்கி, அனைத்து அரசியல்வாதிகளும் திருடர்கள் என்ற கருத்தை ஏற்படுத்தியே அதிகாரம் பெற்றனர். ஆனால் ஜே.ஆர். ஜயவர்தன திறந்த பொருளாதாரத்தையும் மகாவலி திட்டத்தையும் முன்னெடுத்தார். டி.எஸ். சேனாநாயக்க விவசாயத்தை வலுப்படுத்தினார். சிறிமாவோ பண்டாரநாயக்க கைத்தொழிலை வலுப்படுத்தினார். மகிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றபோது எரிபொருள், மின்சாரம், உணவு இன்றி மக்கள் துன்பப்பட்டனர். அப்போது நாட்டை பொறுப்பேற்க பலர் முன்வராத நிலையில் அவர் துணிச்சலுடன் முன்வந்து நாட்டை மீண்டும் வழமைக்கு கொண்டு வந்தார்.
எந்த அரசாங்கமாக இருந்தாலும் தவறு செய்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்த அரசாங்கத்திலும் தவறு செய்பவர்கள் இருக்கலாம். அதற்காக அரசியல் வெறுப்பையும் கோபத்தையும் உருவாக்குவது தீர்வாகாது.
மக்கள் மத்தியில் வெறுப்பையும் கோபத்தையும் உருவாக்கி அரசியல் அதிகாரத்தைப் பெறுவதும், பின்னர் அதே வெறுப்பை பயன்படுத்தி அதிகாரத்தைப் பாதுகாப்பதும் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த வெறுப்பின் விளைவுகளை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். மக்கள் விடுதலை முன்னணியுடன் தொடர்புடைய காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் வெறுப்பின் பின்னணியில் ராஜீவ் காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது. இதனால் இலங்கை சர்வதேச ரீதியில் அவப்பெயரை எதிர்கொண்டது.
எனவே பொலிஸ் மா அதிபர் பெலவத்தை உத்தரவுகளுக்கு அடிபணியாமல் சுயாதீனமாக செயற்பட வேண்டும். உங்கள் அதிகாரியை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாறுபட்ட அரசியல் கருத்தைக் கொண்ட ஒருவரை நாட்டுத் துரோகி எனக் கூற முடியாது. வெறுப்பை உருவாக்கி அதிகாரத்தை பாதுகாக்க முயன்றால் நாட்டுக்கும் மக்களுக்கும் கலாசாரத்துக்கும் பாதிப்பு ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால் நாட்டின் கல்வியறிவு பெற்றவர்கள் மட்டுமன்றி அனைத்து மக்களும் நாட்டை விட்டு வெளியேறும் நிலை உருவாகலாம் என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM