அன்பில் அவன் - திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : ஐங்கரன் இன்டர்நேஷனல் - ஹேப்பி ஹை பிக்சர்ஸ்
நடிகர்கள் : அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், சாபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மகா டெல்லி கணேஷ் மற்றும் பலர்.
இயக்கம் : ஆர். கார்த்திகேயன்
மதிப்பீடு : 2.5/5
அசோக் செல்வன் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'அன்பில் அவன்'. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படத்தை காண பட மாளிகைக்கு வருகை தந்த ரசிகர்களை படக்குழுவினர் மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கினார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தன் மனம் கவர்ந்த காதலியின் விருப்பத்திற்காக மலையின் உச்சியிலிருந்து நீரில் குதித்து சாகச நாயகனாக திகழும் சூர்யா ( அசோக் செல்வன்) - பெரும் தனவந்தரின் செல்ல மகளான இயலை ( பிரீத்தி முகுந்தன்) பெற்றோரின் எதிர்ப்புகளை மீறி காதல் திருமணம் செய்து கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து நாளாந்த வாழ்வியலுக்காக கணவன்- மனைவி இருவரும் நட்சத்திர ஹொட்டேலில் ஊழியர்களாக பணியாற்றுகிறார்கள். பணியிட சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி மற்றும் பணி சுமையின் காரணமாக தங்களுக்குள் அன்பை பரிமாறிக் கொள்வதிலும் நேரம் கிடைக்காததை தாமதமாக உணர்கிறார்கள். மேலும் தங்களுடைய தற்போதைய வாழ்க்கை - மாதந்தோறும் தவணை செலுத்தும் விடுபட இயலாத சங்கிலி முறையிலான வாழ்க்கை என்பதை உணர்கிறார்கள்.
இதிலிருந்து பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற வேண்டும் என்றால் சிறிய அளவிலான தொழிலை தொடங்க வேண்டும் என திட்டமிடுகிறார்கள். அத்துடன் காதலிக்கும்போது காதலியின் விருப்பமான 'ஹோம் ஸ்டே' எனப்படும் சுற்றுலா தலங்களில் பிரத்யேகமான தங்கும் விடுதி ஒன்றினை உருவாக்கி, சுற்றுலாவாசிகளுக்கு தரமான விருந்தோம்பலை வழங்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
இதற்காக தங்களுடைய சேமிப்பு -வங்கிகளில் கடன்- நண்பர்களின் உதவி- ஆகியவற்றை பெற்று, தமிழகத்தில் மலைவாசஸ்தலங்களில் ஒன்றில் பழைய அரண்மனை போன்ற விசாலமான அமைதியான வீடு ஒன்றினை தெரிவு செய்கிறார்கள். ஆனால் அந்த வீட்டின் உரிமையாளரான ராணி பத்மினி ( ரேவதி) அதனை அவர்களுக்கு விற்க மறுக்கிறார். அதனைத் தொடர்ந்து 'இந்த வீடு எங்களின் கனவு.
அத்துடன் என் மனைவியின் ஆசை... 'என அன்பை பற்றி அனுபவ உரையை நிகழ்த்தி, அந்த வீட்டை விலைக்கு வாங்குகிறார் சூர்யா. அதற்குப் பிறகுதான் தொல்லை தொடங்குகிறது. அந்த வீட்டினை சட்டத்திற்கு விரோதமாக கையகப்படுத்த அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜநாயகம் காவல்துறை அதிகாரி தவசி மற்றும் சட்டத்தரணி ஆகியோரின் உதவியுடன் சூர்யா - இயல் தம்பதிகளுக்கு பிரச்சனைகளை கொடுக்கிறார்கள்.
இந்த பிரச்சனைகளை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்..? அவர்களுடைய கனவு நனவானதா? அல்லது கனவாகவே கடந்ததா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
படத்தின் முதல் பகுதியின் இறுதி காட்சி தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த கணவன்- மனைவி இடையேயான ஆழமான பொருள் பொதிந்த உரையாடலுடன் கூடிய உணர்வு பூர்வமான காட்சி. இதற்காகவே இயக்குநரையும், கதாசிரியரையும் மனதார பாராட்டலாம். தமிழ் சினிமாவிற்கு இது ஒரு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தும்.
அதே தருணத்தில் முதல் பாதி வழக்கமான காதல் காட்சிகளும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பவே நகர்கிறது. அத்துடன் இரண்டாம் பாதிக்கான பெரும் எதிர்பார்ப்பையும் இடைவேளை காட்சி உண்டாக்குகிறது.
ஆனால் இரண்டாம் பாதியில் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக திரைக்கதை பயணித்தாலும் உச்சகட்ட காட்சி அதீத நீளம் கொண்டதாலும் எக்சன் காட்சிகள் கதாநாயகனின் நாயக பிம்பத்தை நிறுவுவதை விட வில்லனின் பராக்கிரமத்தை பறைசாற்றுவதற்காகவே நீட்டிக்கப்பட்டிருப்பதால் எரிச்சலை உண்டாக்குகிறது.
'மண்டாடி' படத்தின் உச்சகட்ட காட்சிக்காக பெரிதும் பாராட்டைப் பெற்ற சண்டை பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் - இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற உச்சகட்ட காட்சிக்காக பார்வையாளர்களின் கோபத்தை சம்பாதித்திருக்கிறார். இதனை கட்டுப்படுத்தி இருக்க வேண்டிய படத்தொகுப்பாளர் ஆர் கே செல்வாவும் மௌனமாக இருந்திருப்பது புதிராக இருக்கிறது.
சாகச நாயகன் என்றாலும் உளவியல் ரீதியாக வலிமை பெறாத ஒரு நிலையில் வன்முறையை வாழ்வாதாரமாகக் கொண்ட கூலிப்படை கும்பலை ஒற்றை ஆளாக சமாளிக்க இயலுமா..? அதிலும் காதலித்த காதலியுடன் சேர்ந்து சமாளிக்கலாம் என கதையின் நாயகன் நினைப்பதும் அவை நீண்ட நேரம் நீடித்திருப்பதும் நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.
சூர்யா கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் உண்மையிலேயே உயிரைக் கொடுத்து அடி உதை வாங்கி அற்புதமாக நடித்திருக்கிறார்.
இயல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ப்ரீத்தி முகுந்தனின் அழகும் இளமையும் நடிப்பும் ரசிகர்களை வசீகரிக்கிறது.
இவர்களைக் கடந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜநாயகம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதிர் பாலுவும், சட்டத்தரணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாபு மோன் அப்து சமத்தும், தவசி எனும் காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகா டெல்லி கணேசும் வழக்கம் போல் வில்லத்தனத்தில் இயக்குநர் சொன்னதை மட்டும் செய்திருக்கிறார்கள்.
பாடல்கள் பின்னணி இசை ஒளிப்பதிவு ரசிகர்களுக்கு படைப்பை ரசிப்பதற்கான அனுபவத்தை வழங்குகிறது.
அன்பில் அவன் - பேரன்பின் பிரத்யேக நாயகன்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM