அநியாய வரிகளை நீக்கு வாழ்க்கைச் சுமையை குறைத்திடு..... மக்கள் போராட்ட இயக்கம் கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 1

03 Oct, 2026 | 05:19 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

அநியாயமான வரிக் கொள்கைக்கு எதிராக 'அநியாய வரிகளை நீக்கு; வாழ்க்கைச் சுமையை குறைத்திடு! எனும் தொனிப்பொருளில் மக்கள் போராட்ட இயக்கம் நேற்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ம் ஒன்றை முன்னெடுத்தது.

ஆர்ப்பாட்ட பேரணி சனிக்கிழமை (03) பிற்பகல் கொழும்பு பொரளை கெம்பல் மைதானத்துக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் வரை முன்னெடுக்கப்பட்டது.

முன்னிலை சோசலிசக் கட்சி, மக்கள் போராட்ட முன்னணி, சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் உள்ளிட்ட வெகுஜன அமைப்புகள் மற்றும் சிவில் சமூக கூட்டமைப்புகள் இந்த பேரணியில் கலந்துகொண்டு எதிர்ப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பாதாகைகளை ஏந்தியும் கோசங்கள் எழுப்பியும் தத்தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன்போது மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய நிறைவேற்றுச் சபை உறுப்பினர் வசந்த முதலிகே கருத்து தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் அநியாயமான வரிக் கொள்கைக்கு எதிராகவே இன்று இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நாம் ஏற்பாடு செய்தோம். நாட்டின் மக்களுக்கு போஷாக்கான உணவு வேளையொன்றை பெற்றுக்கொள்வதற்கு மாத்திரமன்றி, இரண்டு வேளையாவது உணவருந்த முடியாத பொருளாதார நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் அமைச்சர்கள் திறைசேரியில் பணம் மிகுதியாக இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சி சாதகமாக அமைந்துள்ளதாகவும் பெருமை பேசுகின்றனர். நாட்டின் பிள்ளைகளில் நான்கில் ஒரு பகுதியினர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருந்தால், வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லாததால் நோயாளிகள் உயிரிழக்கின்றனர் என்றால், அவ்வாறான பொருளாதார வளர்ச்சி எதற்கு? என்பதே கேள்வியாகும்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான  ராஜபக்‌ஷ அரசாங்கம் அன்று சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்காக செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கியது. பொருளாதார மாற்றச் சட்டம் உள்ளிட்ட அநியாயமான சட்டங்களை நிறைவேற்றி, நாட்டின் சாதாரண மக்கள் மீது பாரிய வரிச்சுமையை சுமத்தியது. அந்த வேலைத்திட்டத்தை தோற்கடிக்கவே மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். ஆனால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், மக்களுக்கு கிடைத்தது எதுவுமில்லை.

தித்வா அனர்த்தம் காரணமாக வீடுகளை இழந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் உள்ளனர். ஒரு கூரைத் தகடு சேதமடைந்தாலும் 10 இலட்சம் ரூபாய் வழங்குவோம் என்று ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பெருமை பேசிய போதிலும், அந்த மக்களின் பிரச்சினைகளை இதுவரை தீர்க்க முடியவில்லை.

பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு 20 சதவீதத்துக்கும் அதிகமான வரி விதிக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதும் பாரிய வரிச்சுமை ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ளது. இன்று சிறு பிள்ளைகளுக்கு இறைச்சித் துண்டொன்றையோ முட்டையொன்றையோ சேர்த்து சோறு வழங்குவதற்குக்கூட தாய்மார்களால் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகளில், இலங்கையில் ஐந்து வயதுக்குக் குறைந்த பிள்ளைகளில் ஐந்தில் ஒரு பகுதியினர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது துரதிர்ஷ்டவசமான நிலைமையாகும்.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனும் ஒரு சில செல்வந்தர்களுடனும் இணைந்து சாதாரண மக்கள் மீது பொருளாதார தாக்குதல்களை நடத்துகின்றது. ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் இந்தத் தாக்குதலை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கின்றனர். ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார வேலைத்திட்டத்தையே தற்போதைய அரசாங்கம் அதைவிட சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருவதே காரணமாகும்.

 ராஜபக்‌ஷ அணியினருக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை இல்லை. அவர்கள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் மாத்திரமே பேசுகின்றனர். சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் தேர்தல் வரும் வரையில் காத்திருந்து தமது அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளும் நோக்கில் செயற்படுகின்றனர். எனவே, பாராளுமன்ற எதிர்க்கட்சியில் இருக்கும் எவரும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதில்லை.

ஆகவே, இந்த பொருளாதார தாக்குதலுக்கு எதிராக மக்கள் அமைப்புசார்ந்து போராட வேண்டும் என நாம் கருதுகின்றோம். இன்னும் சில தினங்களில் அடுத்த வரவு-செலவுத் திட்டம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. அந்த வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாகவும் மக்கள்மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை அதிகரிப்பதே இடம்பெறவுள்ளது.

எனவே, இந்த அநியாயமான மோசமான வரிக் கொள்கைக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்க வேண்டும் என நாம் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். மக்கள் போராட்ட இயக்கம் என்ற வகையில், இந்த அநியாயமான வரிக் கொள்கையை தோற்கடிப்பதுக்கு தலையீட்டை நாம் மேற்கொள்வோம் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை...

2026-10-13 13:49:00
news-image

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு...

2026-10-13 16:41:45
news-image

இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு –...

2026-10-13 15:01:45
news-image

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின்...

2026-10-13 22:56:02
news-image

மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க...

2026-10-13 17:29:58
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்...

2026-10-13 15:48:47
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 17:31:45
news-image

இலங்கையில் இணையவழிக் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர்கள்:...

2026-10-13 15:24:54
news-image

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலை ...

2026-10-13 16:49:19
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 21:55:19
news-image

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான...

2026-10-13 17:03:22
news-image

தலதா மாளிகை தாக்குதல் குறித்து ஜே.வி.பி...

2026-10-13 17:34:59