நெல்லையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால் தீக்குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் காவிதர்மம் பதியைச் சேர்ந்த 28 வயதுடைய இசக்கிமுத்து அவரது 25 வயதுடைய மனைவி, 5 மற்றும் ஒரு வயதுடைய இரு மகள் உள்ளிட்ட 4 பேரும் நெல்லை மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று திங்கட் கிழமை தீக்குளித்தனர். 

கந்துவட்டிக் கொடுமையால் குறித்த நால்வரும் தீக்குளித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தீக்காயங்களுடன் நெல்லை அரச பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி காருண்யா, அட்சயா பரணிகா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் இசக்கிமுத்து வைத்தியசாலையில் உயிருக்காகப் போராடி வருகிறார்.

இது குறித்து இசக்கிமுத்துவின் சகோதரர் தெரிவிக்கையில், 

"என்னுடைய அண்ணன் இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி காசிதர்மத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் ரூ.1.45 இலட்சம் கடன் வாங்கியிருந்தார். 

அதை தங்கம்மா என்பவரிடம் கொடுத்திருந்தார். 8 மாதங்களுக்கு முன் வாங்கிய இந்தக் கடன் தொகைக்காக தங்கம்மா ரூ.2,34,000 வட்டி செலுத்தியிருக்கிறார். 

இந்நிலையில் அசல் தொகை ரூ.1.45 இலட்சத்தை தருமாறு முத்துலட்சுமி என் அண்ணிக்கு நெருக்கடி கொடுத்தார். மிரட்டல் விடுத்துவந்தார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர் முகாமின்போது 6 முறை மனு கொடுத்தோம். மனுவை எஸ்.பி., அலுவலகத்துக்கு அவர்கள் மாற்றிவிட்டனர். 

எஸ்.பி. அலுவலகத்திலிருந்து அச்சன்புதூர் பொலிஸ் நிலையத்துக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. 

ஆனால், அச்சன்புதூர் காவல்துறையினர் முத்துலட்சுமி தரப்புக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே, மிகுந்த மன உளைச்சலோடு இன்று மீண்டும் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தோம். நான் கழிவறை சென்று திரும்புவதற்குள் என்னுடைய சகோதரர் குடும்பத்தினர் இந்தக் கோர முடிவை எடுத்துள்ளனர். என் சகோதரர் குடும்பத்தினர் உயிரிழந்தால் அதற்கு மாவட்ட ஆட்சியரே பொறுப்பேற்க வேண்டும்" எனக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளித்து உயிரிழந்த மூன்று பேரின் சடலங்களும் உறவினர்களிடம் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.