பிர­த­மரின் பொரு­ளா­தார கொள்கை பிர­க­டனம் மக்­களை ஏமாற்றும் நோக்­கத்தில் அமைக்­கப்­பட்­ட­தாகும். 2020 இல் நாட்டை வறுமை அற்ற நாடாக மாற்­று­வ­தற்­கு­ரிய பொரு­ளா­தார அபி­வி­ருத்தி திட்­டங்கள் எதுவும் அர­சாங்­கத்­திடம் இருந்து வெளிப்­ப­ட­வில்லை என லங்கா சம­ச­மாஜ கட்­சியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான திஸ்ஸ விதா­ரண தெரி­வித்தார்.

சோச­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

"பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை நிலை­யா­ன­தொரு நிலைக்கு கொண்­டு­வ­ரவும் 2025இல் வறு­மையை ஒழித்து செல்­வந்த நாடாக மாற்­றி­ய­மைக்கும் திட்­டத்தில் தனது பொரு­ளா­தார கொள்­கையை முன்­வைத்­துள்ளார். ஆனால் அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வந்து இரண்­டரை வரு­டங்கள் கடந்தும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வேகம் இருந்­த­தை­விட குறை­வா­கவே பதி­வா­கி­யுள்­ளது. 

அத்­துடன் கடந்த அர­சாங்க காலத்தில் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வேகம் 7.8 வீதம் ஆக இருந்த நிலை­யிலே புதிய அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வந்­தது. ஆனால் தற்­போது அர­சாங்­கத்தின் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வேகம் 4.3 வீதம் ஆக குறை­வ­டைந்­துள்­ளது. 

அத்­துடன் அர­சாங்­கத்தின் முறை­யற்ற நட­வ­டிக்­கையால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. சர்­வ­தேச நாடு­க­ளி­ட­மி­ருந்து கடன் பெற்­றுள்­ளதால்  மக்­களின் நிவா­ர­ணங்கள் குறைக்­கப்­ப­டு­கின்­றன. அத்­துடன் கடனை அடைப்­ப­தற்கு நாட்டின் வளங்கள் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன.

இவ்­வா­றான நிலையில் 2025 இல் நாட்டின் வறு­மையை ஒழித்து செல்­வந்த நாடாக மாற்றும் பிர­த­மரின் பொரு­ளா­தார கொள்கை மக்­களை ஏமாற்றும் நட­வ­டிக்­கை­யாகும். அத்­துடன் 2025 இல் தனி நபர் வரு­மானம் 5 ஆயிரம் டொலர்­வரை அதி­க­ரிக்­கச்­செய்­வ­தா­கவும் பிர­தமர் தெரி­வித்­துள்ளார்.  பிர­தமர் பொறுப்­பில்­லா­மலே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். ஏனெனில் தனி நபர் வரு­மா­னத்தை 5 ஆயிரம் டொலர் வரை அதி­க­ரிப்­ப­தென்றால் நாட்டின் அபி­வி­ருத்தி வேகம் 9.3 வீதம் ஆக இருக்­க­வேண்டும் என பொரு­ளா­தார நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர்.

எனவே அர­சாங்­கத்­திடம் பொரு­ளா­தார அபிவிருத்திக்கு தேவை­யான, முறை­யான எந்த வேலைத்­திட்­டமும் இல்­லாமல் 2025 ஆம் ஆண்­டாகும் போது நாட்டின் வறு­மையை ஒழித்து செல்வந்த நாடாக மாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்திருப்பதானது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும்.

அத்துடன் பொறுப்புவாய்ந்த பிரதமர் பொறுப்பற்ற முறையில் மக்களு க்கு வாக்குறுதியளிப்பதானது மோசமான செயலாகும்" என்றார்.