மூன்று புதிய தூதுவர்களும் இரண்டு உயர் ஸ்தானிகர்களும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர்.

கனடா, ரஷ்யா, மாலைத்தீவு, பாகிஸ்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கனடாவின் உயர்ஸ்தானிகராக டேவிட் மெக்கினன், ரஷ்யத் தூதுவராக யூரி பி மெற்றியரி, மாலைதீவின் தூதுவராக மொஹமட் ஹுசைன் ஷரீப், பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகராக சகீத் அஹமட் ஹஸ்மத், எகிப்தின் தூதுவராக ஹுசைன்எல் சகார்த்தி ஆகியோர் புதிதாக நியமனம் பெற்ற தூதுவர்கள் ஆவர்.

இலங்கைக்கும் புதிய தூதுவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளுக்குமிடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு கூட்டுறவை மேலும் பலப்படுத்த புதிய தூதுவர்கள் அர்ப்பணிப்புடன் உழைப்பார்கள் என நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கையின் மத்திமப் போக்குடைய வெளிநாட்டுக்கொள்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

புதிய தூதுவர்கள் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இலங்கைக்கு வந்திருப்பதாகக் குறிப்பிட்ட பதில் வெளிவிவகார அமைச்சர் வசந்த சேனாநாயக்க, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை சர்வதேச சமூகத்தின் உதவியையும் நல்லெண்ணத்தையும் வென்றுள்ளதாகவும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி அர்ப்பணிப்புடன் உழைத்து வருவதாகவும் தெரிவித்தார். நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகள், முதலீடு மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு தற்போதைய சாதகமான சூழ்நிலையை புதிய தூதுவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகள் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணாந்து, வெளிவிவகாரச் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோர் இந்நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.