நல்லத்தண்ணி - சிவனொளிபாத மலை பகுதியில், சரிந்த குப்பை மேட்டை அகற்றும் பணியை, 40 பேர் கொண்ட இராணுவ குழுவினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக லக்ஷபான இராணுவ பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

கடந்த 18ம் திகதி சிவனொளிபாத மலையின் மாகிரிதம்ப எனும் பகுதியில் குப்பை மேடு சரிந்து வீழ்ந்தமையினால், சிவனொளி பாதமலைக்கு செல்லும் நடை பாதை சுமார் 15 மீட்டர் தூரம் வரை தடைப்பட்டது. 

பருவகாலத்தில் மலையுச்சிக்கு செல்லும் பாத யாத்திரிகளினால் எரியப்பட்ட பிளார்ஸ்ரிக் போத்தல்கள் உட்பட கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த குப்பை மேடே இவ்வாறு சரிந்துள்ளது. 

நல்லத்தண்ணி பொலிஸார் சிவில் பாதுகாப்பு குழுவினர் மற்றும் இராணுவத்தினரால் குப்பை மேட்டை அகற்றும் முதல் கட்ட பணி நேற்று ஆரம்பமாகிய நிலையில், லக்ஷபான இராணுவ வீரர்களினால் இரண்டாவது நாளாக இன்றும் இப் பணி தொடர்கின்றது. 

சரிந்த குப்பைமோட்டை அகற்ற இன்னும் சில தினங்கள் செல்லும் எனவும், தொடர்ந்து லக்ஷபான இராணுவ வீர்கள் 40 பேர் கொண்ட குழுவினர் மலையில் தங்கியிருந்து பணிகளை தொடரவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.