இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில், ஆட்ட நிர்ணயம் நடத்தப்படவிருந்தது அம்பலமாகியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தம்மைச் சந்தித்த ஒருவர், தன்னுடன் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுமாறும், அதற்காகப் பெருந்தொகைப் பணத்தை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் கூறியதாக, பாகிஸ்தான் அணித் தலைவர் சஃப்ராஸ் அஹமட் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தாம் உடனடியாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவினரிடம் அறிவித்ததாகவும் சஃப்ராஸ் கூறியுள்ளார்.

இதையடுத்து, சர்வதேச கிரிக்கெட் சபை முன் ஆஜரான சஃப்ராஸ், மேற்படி சம்பவம் குறித்து வாக்குமூலம் ஒன்றையும் அளித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

“நான் என் குடும்பத்தினருடன் டுபாயைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது ஒரு வர்த்தக நிலையத்தில், முன்பின் அறிமுகமில்லாத நபர் ஒருவர் என்னை அணுகினார். கிரிக்கெட் ரசிகராக இருக்கலாம் என்றும், என்னிடம் கையெழுத்து வாங்கவோ, ‘செல்ஃபி’ எடுத்துக்கொள்ளவோ விரும்புகிறார் என்று நானும் அவரிடன் பேசினேன்.

“அப்போது அவர், அடுத்த போட்டியில் (இரண்டாவது போட்டியில்) ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட நான் தயாரா என்றும், தயார் என்றால் பெருந்தொகைப் பணத்தைப் பெறலாம் என்றும் ஆசை காட்டினார்.

“ஆனால் அதைக் கடுமையாக மறுத்த நான், உடனடியாக அது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கும், பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் தெரிவித்தேன். இதையடுத்து, எனக்கும் எனது அணியினருக்குமான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.