மெர்சல் படத்துக்கு மறு தணிக்கை தேவையில்லை என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் படம் மெர்சல். தமிழகம் முழுவதும் சுமார் 700 திரைகளில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் வெளியாவதற்கு முன்பே சில சர்ச்சைகள் வெளியாகி இருந்த நிலையில், படம் வெளியான பின்னரும் மெர்சல் படத்திற்கு எதிராக சில பிரச்சனைகள் எழும்பத் தொடங்கின. 

மெர்சல் படத்தில் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் வியாபாரம் ஆகிவிட்டது. அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட வேண்டும். அனைவருக்கும் அரசு இலவச மருத்துவம் கொடுப்பது மிகவும் முக்கியம் என்பதை வற்புறுத்தும் விஜய் ஜி.எஸ்.டி வரி, டிஜிட்டல் இந்தியா, பணம் மதிப்பிழப்பு ஆகியவற்றை சாடி வசனம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, மெர்சல் படத்தில் இடம்பெற்ற மத்திய அரசுக்கு எதிரான ஜி.எஸ்டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து இடம்பெற்ற காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா, பணம் மதிப்பிழப்பு உள்ளிட்ட காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், மெர்சல் படத்துக்கு மறு தணிக்கை தேவையில்லை என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், மெர்சல் படத்துக்கு தணிக்கை சான்று பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்யக் கூடாது. விமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். விமர்சிப்போரை மௌனமாக்கக் கூடாது. கருத்துக்களை தெரிவிக்கும்போது தான் இந்தியா ஒளிரும் என தெரிவித்துள்ளார்.

இதேபோல், ம.தி.மு.க. நிறுவனர் வைகோவும் மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சமுதாயத்துக்கு தேவையான வசனங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளன. அரசு மருத்துவமனை தொடர்பாக படத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.