தலவாக்கலை நகரில் கடந்த 17ஆம் திகதி காணாமல்போன 18 வயதுடைய இளைஞன்  இன்று பகல் மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆற்றில் சடலமொன்று மிதந்து கொண்டிருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் புத்தளம் கந்தகுடா பகுதியைச்சேர்ந்த 18 வயதுடைய முகம்மது நிலாம்தீன் முகம்மது அஸ்ஜட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தலவாக்கலை  நகரசபையின் கடையொன்றினை கூலிக்காக பெற்று ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த குறித்த இளைஞன்  கடந்த 17ஆம் திகதி இரவு கழிவறை செல்வதாக கூறிவிட்டு சென்றவர்  மறு நாள் காலை  வரை வராதமையினால் சக ஊழியர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட இளைஞரது சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என பலகோணங்களில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.