ஒரு தேச துரோகியின் குழந்தையை வளர்க்க மாட்டேன் என்று தெரிவித்துள்ள ஐ.எஸ்.ஐ. உளவாளி இஜாஸின் மனைவி தனக்கு பிறந்த குழந்தைக்கு பாலூட்ட மறத்துள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இர்பானாபாத்தை சேர்ந்த முஹமது இஜாஸ் என்கின்ற முகமது கலாம் ஒரு ஐ.எஸ்.ஐ. உளவாளி. இவர் இந்திய இராணுவ இரகசியங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை திருடிச் செல்வதற்காக இந்தியாவில் ஊடுருவியிருந்த போது சிறப்பு அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டார். இதன்போது அவரிடம் இருந்து இந்திய இராணுவ இரகசியங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு கொடுத்த பயிற்சியின் அடிப்படையில் கடந்த 2012 ஆம் ஆண்டு வங்கதேசம் வழியாக இந்தியாவுக்கு வந்த இஜாஸ், உத்தரப் பிரதேசத்தில் பரேலி நகர மக்களுடன் நெருக்கமாக பழகி அஸ்மா என்ற இந்திய பெண்ணை கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். அஸ்மா கர்பமடைந்திருந்த வேளை கடந்த நவம்பர் மாதம் இஜாஸ் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

தற்போது அஸ்மாவுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், இஜாஸ் உடனான திருமணம் மூலம் செய்த தவறை என்னால் துடைத்தழிக்க முடியாது. ஆனால் ஒரு தேச துரோகியின் குழந்தையை வளர்ப்பதன் மூலம் மேலும் நான் பாவம் செய்ய முடியாது என தெரிவித்துள்ள அவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த குழந்தையை குழந்தைகள் நல சமிதியிடம் ஒப்படைத்துள்ளனர்.